இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழக்கவழக்கங்கள்
|சீரான தூக்கமும், ஓய்வும் இதயத்துக்கு முக்கியமானவை. தூக்கம் குறையும்போது ரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகரிக்கும். இதனால், இதயத்துக்கு பாதிப்பு ஏற்படும். முழுமையான இரவு நேர தூக்கம் இதயத்துக்கு இதமளிக்கும்.
உடலில் கடினமாக உழைக்கும் உறுப்புகளில் ஒன்று, இதயம். இது உடல் முழுவதும் ரத்தத்தை செலுத்துகிறது. செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. இதயத்தின் செயல்பாட்டில் எதிர்மறையான மாற்றங்கள் ஏற்படும்போது, உயர் ரத்த அழுத்தம், உறுப்புக்கள் செயல் இழப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
இதயக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு பெண்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிலக்கு நின்ற பெண்கள், மற்ற பெண்களைக் காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், ஹார்மோன் கோளாறு, மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவற்றால் பெண்களை இதயநோய் தாக்குகிறது. இதில் பலருக்கு நோய் இறுதி கட்டத்தை எட்டிய நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது.
இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு, சில வாழ்வியல் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சீரான தூக்கமும், ஓய்வும் இதயத்துக்கு முக்கியமானவை. தூக்கம் குறையும்போது ரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகரிக்கும். இதனால், இதயத்துக்கு பாதிப்பு ஏற்படும். முழுமையான இரவு நேர தூக்கம் இதயத்துக்கு இதமளிக்கும்.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு, உடல் பருமன் போன்ற வாழ்வியல் நோய்களை கட்டுக்குள் வைத்திருப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நடைப்பயிற்சி, ஓடுதல், நீச்சல், யோகா, நடனம், ஏரோபிக்ஸ், ஜும்பா, உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற ஏதேனும் ஒரு பயிற்சியை தினசரி 45 நிமிடங்களாவது செய்ய வேண்டும். இவை இதயத் துடிப்பையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்துக்கும், ஆக்ஸிஜன் கிடைக்கவும் வழிவகுக்கும். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவும்.
குறைந்த கொழுப்பு, குறைந்த உப்பு, அதிக நார்ச்சத்து போன்றவை உணவில் இருத்தல் அவசியம். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு படியாது. ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாது.
மனஅழுத்தம், மனச்சோர்வு போன்றவை இதய நோய்களுக்கு வழிவகுக்கும். எப்போதும் மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்வது இதயத்தை இதமாக்கும். நமக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபடுவது ஒன்றே சிறந்த வழி. மனதை அமைதியாக்கும் யோகா, இசை மற்றும் சில நிமிட தூக்கத்தை மேற்கொள்ளலாம். இவை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தசைகளை தளர்வாக்கும். இதனால், இதயம் மட்டுமில்லாமல், முழு உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.