< Back
வாழ்க்கை முறை
மன அழுத்தத்தைக் குறைக்கும் டூடுலிங்
வாழ்க்கை முறை

மன அழுத்தத்தைக் குறைக்கும் 'டூடுலிங்'

தினத்தந்தி
|
23 July 2023 7:00 AM IST

டூடுலிங் மூலம் படைப்புத்திறன் மற்றும் செயலாக்கத்திறன் மேம்படும். சலிப்பை வெளிப்படுத்த இவ்வாறு வரையும்போது மன அழுத்தம் குறையும். டூடுலிங் வரைவது ஒருவருடைய நினைவுத்திறனை அதிகரிப்பதாக இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

தாவது ஒரு வேலையில் நீண்ட நேரம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, சிலருக்கு மனம் சலிப்படையக்கூடும். அத்தகைய தருணங்களில் கையில் பென்சிலும், காகிதமும் இருந்தால் தங்களை அறியாமலேயே ஏதாவது கிறுக்கிக் கொண்டு இருப்பார்கள். இவ்வாறு வரைவதையே 'டூடுலிங்' என்று அழைக்கிறார்கள். இந்த முறையில் வரையப்படும் கோடுகள், வடிவங்கள் ஆகியவை 'டூடுல்ஸ்' என்று குறிப்பிடப்படுகின்றன.

வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது மாணவர்கள் அதைக் கவனிக்காமல் நோட்டுப் புத்தகத்தில் ஏதாவது வரைந்து கொண்டு இருப்பது, தொலைபேசி உரையாடலின்போது எதையாவது வரைந்து கொண்டே பேசுவது, இவையெல்லாம் டூடுலிங்கிற்கு உதாரணங்களாகும்.

சலிப்பை உண்டாக்கும் விஷயங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, மூளை தன்னிச்சையாக செயல்பட்டு தன்னை விழிப்புடன் வைத்துக்கொள்ள முனையும். அதன் வெளிப்பாடாகத்தான் இத்தகைய இலக்கற்ற கிறுக்கல்கள் வரையப்படுகின்றன. இதுகுறித்த ஆய்வுகளின் மூலம், கவனச்சிதறலைக் கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துவதற்கு டூடுலிங் உதவும் என்பது தெரிய வந்துள்ளது.

டூடுலிங் மூலம் படைப்புத்திறன் மற்றும் செயலாக்கத்திறன் மேம்படும். சலிப்பை வெளிப்படுத்த இவ்வாறு வரையும்போது மன அழுத்தம் குறையும். டூடுலிங் வரைவது ஒருவருடைய நினைவுத்திறனை அதிகரிப்பதாக இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

டூடுலிங் செய்வதன் மூலம், ஒரு பிரச்சினையை பல்வேறு கோணங்களில் யோசித்து தீர்வு காண இயலும். டூடுலிங் மூலம் ஆழ்மனதில் இருக்கும் உணர்வுகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை உற்றுக் கவனித்தால் ஒருவர் தன்னைப் பற்றி அதிகமாக புரிந்துகொள்ள முடியும். இதனால் பதற்றம் குறைந்து மனம் அமைதியாகும். உயர் ரத்த அழுத்தம் குறையும். தூக்கம் சீராகும்.

டூடுலிங் வரைவதற்கு தனிப்பட்ட பயிற்சியோ, உபகரணங்களோ தேவையில்லை. பென்சில் அல்லது பேனா கொண்டு சாதாரண காகிதத்திலும் உங்கள் விருப்பப்படி வரையலாம். நீங்கள் வரையும் வடிவங்கள் கச்சிதமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

மேலும் செய்திகள்