விதவிதமாக துப்பட்டா அணியும் முறை
|உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும்.
ஆடைக்கு ஏற்றவாறு பெண்கள் அணியும் துப்பட்டா, அவர்களுக்கு கூடுதல் அழகையும், பாதுகாப்பையும் தரக்கூடியது. இதை ஒரே மாதிரியாக அணியாமல், பலவிதமான முறைகளில் அணிய முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே.
பின்னல் அமைப்பு ஸ்டைல்:
உங்களுக்குப் பிடித்த நீளமான துப்பட்டாவை எடுத்து, இரண்டாக மடித்துக்கொள்ள வேண்டும். பின் கழுத்து வழியாக துப்பட்டா முன்னால் வரும்படி அணிந்தால், ஒரு பக்கத்தில் துப்பட்டாவின் இரண்டு முனைகளும், மறுபக்கத்தில் துப்பட்டாவை மடக்கிய வளையம் போன்ற அமைப்பும் கிடைக்கும். அந்த இடைவெளி வழியாக துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் இழுக்க வேண்டும். பின்பு அவற்றை இன்னொரு முறை சுழற்றி அவற்றில் துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் இழுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் 'பின்னல்' போன்ற அமைப்பில் துப்பட்டாவை அணியலாம்.
டபுள் பந்தனா ஸ்டைல்:
இந்த ஸ்டைலில் சதுர அல்லது செவ்வக வடிவில் நான்கு முனைகளுடன் இருக்கும் துப்பட்டாவை, எதிரெதிர் முனையுடன் சேர்த்து மடித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது துப்பட்டா முக்கோண வடிவத்திற்கு வரும். பிறகு துப்பட்டா மடிக்கப்பட்ட இடத்தில் உள்ள நேரெதிர் முனைகளை முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். வளையம் போன்ற அமைப்பை கழுத்தில் அணிந்து கொண்டு அதனை சுழற்றி திருப்பி தலையில் அணிந்து கொள்ள வேண்டும். பின்பக்கமாக சென்ற துப்பட்டாவை, முன்புறமாக மாற்றிக் கொண்டால் 'டபுள் பந்தனா' டிசைன் தயார்.
பிரெஞ்சு வளைவு ஸ்டைல்:
பெண்களை மிகவும் கவர்ந்த ஸ்டைலான இதை செய்வதற்கு, துப்பட்டாவை இரண்டாக மடித்து கழுத்தில் அணிய வேண்டும். பிறகு, ஒரு பக்கத்தில் வரும் வளையத்தில், அதாவது ஓட்டையில் மறுபக்கத்தில் உள்ள துப்பட்டாவின் இரண்டு முனைகளில் ஒரு முனையை இழுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே வளையத்தில் மற்றொரு முனையையும் உள்ளிழுத்தால், அழகான 'பிரெஞ்சு வளைவு' தயாராகிவிடும்.
பின்புற முடிச்சு 'கோட்' ஸ்டைல்:
நீளமான துப்பட்டாவை, முதுகுக்கு பின்புறமாக தோள்பட்டையில் கைகளைக் கட்டுவது போல நன்றாக முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு முடிச்சு போட்ட இடத்தை மறைய வைக்கும் படி துப்பட்டாவை தோள் வரை இழுத்துக்கொள்ள வேண்டும். இந்த முறையில் துப்பட்டா முன்புறமாக பார்க்கையில், கோட் அணிந்ததுபோல அழகான காட்சியை ஏற்படுத்தும்.
பெல்ட் கேப் ஸ்டைல்:
பெரிதாக இருக்கும் துப்பட்டாவை முக்கோண வடிவில் மடித்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இரு பக்கத்திலும் உள்ள துப்பட்டாவை ஒன்றின் மேல் ஒன்று வைத்து துப்பட்டாவின் நிறத்திற்கேற்ற பெல்டை இடுப்பு பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்டைல், பல பெண்களால் விரும்பி அணியப்படுகிறது.