< Back
வாழ்க்கை முறை
புற்றுநோயுடன் போராடும் பெண்களின் கவனத்துக்கு…
வாழ்க்கை முறை

புற்றுநோயுடன் போராடும் பெண்களின் கவனத்துக்கு…

தினத்தந்தி
|
24 July 2022 7:00 AM IST

மனதுக்கு பிடித்த செயல்களில் ஈடுபடுங்கள். செய்யும் செயல்களை மகிழ்ந்து விரும்பிச் செய்தால் புத்துணர்வு எழும்.

டலின் சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து, மற்ற பாகங்களுக்கும் பரவுவதே புற்றுநோய். பெண்கள் மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியல், நுரையீரல், கர்ப்பப்பை வாய், தோல் மற்றும் கருப்பை புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

புற்றுநோய் உடல்நிலையை பாதிப்பதோடு மட்டுமில்லாமல், பல்வேறு உணர்வு மாற்றங்களால் மனநிலையையும் பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்துகொண்டதுமே, பலருக்கு மரணத்தைப் பற்றிய பயமும், பதற்றமும் தன்னிச்சையாக எழுகிறது. இருப்பினும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், புற்றுநோயை குணமாக்குவது சாத்தியமே.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனதளவில் உறுதியாக இருப்பது முக்கியம். அப்போதுதான், அந்த நோயை எதிர்த்து போராடும் காலத்தில் எழும் எதிர்மறையான சிந்தனைகளை வெல்ல முடியும்.

மன ஆரோக்கியத்தை பேணுவதற்கான சில வழிமுறைகள்.

 உடல் நிலையை எண்ணி வருந்தக்கூடாது. சிகிச்சை பெறும் காலத்தில் உடல் எடை குறைதல், முடி கொட்டுதல், முகமாற்றம், சோர்வு என பல மாற்றங்கள் உடலில் நிகழும். அதை எண்ணி வருந்துவதற்கு மாறாக, வலிமையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

 பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் வெளி உலகத்தையும், பிறரை தொடர்பு கொள்வதையும் தவிர்த்துவிடுவார்கள். அவ்வாறு செய்யாமல் எப்பொழுதும்போல குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவிட வேண்டும். அப்பொழுதுதான் 'நாம் நோயாளி' எனும் எதிர்மறை எண்ணம் எழாது.

 தனிமையில் இருப்பதை தவிருங்கள். எதிர்மறை எண்ணங்களான கவலை, மனஅழுத்தம், சோர்வு, பதற்றம், தூக்கமின்மை போன்றவை தனிமையில் இருப்பவர்களை அதிகமாக பாதிக்கும். எனவே தனியாக இருப்பதை விடுத்து பிறருடன் நேரத்தை செலவிடலாம்.

 மனதுக்கு பிடித்த செயல்களில் ஈடுபடுங்கள். செய்யும் செயல்களை மகிழ்ந்து விரும்பிச் செய்தால் புத்துணர்வு எழும்.

 புற்றுநோயாளிகள் மற்றும் அதில் இருந்து மீண்டு வெற்றிகரமாக உயிர் பிழைத்தவர்களுடன் பேசுவது, புற்றுநோயை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

 உடற்பயிற்சி, தியானம் ஆகியவை அமைதியை தருவதோடு உடலையும், மனதையும் சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும். சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவும் கேடயங்களாகும்.

மேற்கூறிய குறிப்புகளை பின்பற்றுவதோடு, புற்றுநோய் உங்களின் முடிவு அல்ல, அதை எதிர்த்துப் போராடிய எண்ணற்ற பெண்கள் தங்கள் மனஉறுதியாலும், விடாமுயற்சியாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்