மாதவிலக்கு நீண்ட நாட்கள் நீடித்தால் என்ன செய்ய வேண்டும்?
|ஹார்மோன் கோளாறு, கருப்பையில் ஏற்படும் பிரச்சினை, மாதவிடாய் நிற்கும் வயது, சில வகை மாத்திரைகளை உட்கொள்வது போன்றவை நீண்ட நாட்களாக நீடிக்கும் மாதவிடாய்க்கு காரணமாகும். சில நேரங்களில் இது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். ஏழு நாட்களுக்கு மேல் ரத்தப்போக்கு தொடர்ந்தால், அது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இயல்பை விட நீண்ட காலம் நீடிக்கும் மாதவிடாய் 'ஹைப்பர் மெனோரியா மற்றும் மெனோராஜியா' என்று அழைக்கப்படுகிறது. 7 நாட்களுக்கு மேல் அதிக அளவில் வெளியேறும் ரத்தப்போக்கு, கனமான உணர்வு, குமட்டல், வாந்தி, கடுமையான வலி, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஹார்மோன் கோளாறு, கருப்பையில் ஏற்படும் பிரச்சினை, மாதவிடாய் நிற்கும் வயது, சில வகை மாத்திரைகளை உட்கொள்வது போன்றவை நீண்ட நாட்களாக நீடிக்கும் மாதவிடாய்க்கு காரணமாகும். சில நேரங்களில் இது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
இரும்புச்சத்து குறைபாடு, நீண்ட கால மாதவிடாய் போக்கிற்கு வழிவகுக்கும். தினசரி உணவில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பது மாதவிடாய் சுழற்சியை சீராக்கும். பாதாம், திராட்சை, முட்டை, பீன்ஸ், கீரை வகைகள், இறைச்சி, சிவப்பு நிற காய்கறி, பழங்கள் மற்றும் தானியங்களில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது.
மாதவிடாய் போக்கு நீண்ட நாள் இருக்கும் பெண்களுக்கு வைட்டமின் 'ஏ' குறைபாடு இருக்கும். சீஸ், முட்டை, மீன், பால், தயிர், இறைச்சி, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறி, பழங்களை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மாதவிலக்கும், உணவும்
பெண்கள் மாதவிலக்கு ஆகும் காலத்துக்கு முன்பும், ரத்தப்போக்கு இருக்கும் நாட்களிலும், மாதவிடாய் முடிந்த பின்பும் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கியம். மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதில், ஊட்டச்சத்து நிறைந்த உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். இதனால் பசி, எரிச்சல், சோர்வு மற்றும் எதிர்மறையான மனநிலை மாற்றங்கள் உண்டாகும்.
இதைத் தவிர்ப்பதற்கு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறி, பழங்கள், டார்க் சாக்லெட் போன்றவற்றை அதிகமாக சாப்பிடலாம். போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது முக்கியம். உப்பை குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். அதிகமாக சாப்பிடாமல் அளவாக உணவு உட்கொள்வது நல்லது.
மாதவிடாய் ஆரம்பித்து ரத்தப்போக்கு ஏற்படும் நாட்களில் இரும்பு மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகள், முழு தானியங்கள், மீன், முட்டை, தயிர், டார்க் சாக்லெட் போன்றவற்றை சாப்பிடலாம். இஞ்சி தேநீர், மாதவிடாய் நேரத்தில் வலியைக் குறைக்க உதவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம்.
மாதவிடாய் முடிந்த பின்பு புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'பி' நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பால் மற்றும் பால் பொருட்களை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.