மருத்துவ குணங்கள் நிறைந்த 'நீர் ஆப்பிள்'
|நீர் ஆப்பிளில், வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகிய பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது 'நீர் ஆப்பிள்'. ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக்கூடிய நீர் ஆப்பிள் மரத்தின் தாயகம் இந்தியா. இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. அவற்றில் சில இங்கே...
செல்கள் சேதத்தைத் தடுக்கும்:
நீர் ஆப்பிளில், வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகிய பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள பிளேவனாய்டுகள் எனும் பினாலிக் கலவைகள், இதயநோய், புற்றுநோய் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சினைகளுக்குச்சிறந்த தீர்வாக அமைகிறது. மாசுகள், ரசாயனங்கள் காரணமாக செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது. நீர் ஆப்பிளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றப் பண்பு, உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மை கொண்டது.
பக்கவாதத்தைத் தடுக்கும்:
நீர் ஆப்பிளில், சோடியம் மற்றும் கெட்டக் கொழுப்பு குறைவாக உள்ளது. இது பக்கவாதம், தசை வீக்கம், ஆக்ஸிஜனேற்ற பாதிப்பு, பெருந்தமனி தடிப்பு, ரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பாதிப்பு
களைக் குறைக்கிறது. வெளிநாடுகளில் இந்தப் பழத்தை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்கின்றனர். நீர் ஆப்பிளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும்:
நீர் ஆப்பிள், ரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்கும். நீர்ச்சத்து அதிகம் கொண்டிருப் பதால், உடலில் வறட்சியைத் தடுக்கும். மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை சீராக்கும். நார்ச்சத்து நிறைந்த இப்பழம் மலச்சிக்கலை நீக்கும்.
தசைப்பிடிப்பு வலி போக்கும்:
நீர் ஆப்பிளில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்து தசைகளுக்கு வலிமை தரும். உடலில் நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் தசைப்பிடிப்பு வலியைப் போக்கும். மது மற்றும் புகைப் பழக்கம், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹெபடோடாக்ஸிக் மருந்துகள் சாப்பிடுவது போன்றவற்றால் உண்டாகும் கல்லீரல் பாதிப்புக்கு இந்தப் பழம் சிறந்த தீர்வாகும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது:
நீர் ஆப்பிளில் வைட்டமின் 'ஏ' மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இது பெண்களுக்கு மகப்பேறுக்குப் பின்பு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு, உடல்வலி, சோர்வு ஆகியவற்றைப் போக்கும் தன்மை கொண்டது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, மயக்கம் ஆகியவற்றுக்கும் 'நீர் ஆப்பிள்' சிறந்த தீர்வாகும்.