< Back
ஆரோக்கியம் அழகு
கூந்தலையும், சருமத்தையும் காக்கும் வால்நட் எண்ணெய்
ஆரோக்கியம் அழகு

கூந்தலையும், சருமத்தையும் காக்கும் வால்நட் எண்ணெய்

தினத்தந்தி
|
7 Aug 2022 7:00 AM IST

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும். மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும்.

னித மூளையைப் போன்ற தோற்றம் கொண்டது வால்நட். காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

பல்வேறு நன்மைகளை தரும் வால்நட், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு அதிக அளவில் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவையும், தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.

சுருக்கம் மற்றும் வறட்சி:

வால்நட் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி, கீழிருந்து மேல் நோக்கியவாறு வட்டவடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் எண்ணெய் ஊடுருவி, சுருக்கங்களை நீக்கி, இளமை தோற்றத்தை மீட்டுத்தரும். இரவில், இந்த எண்ணெய்யை நன்றாகத் தடவி மசாஜ் செய்து வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதமாகும்.

வால்நட் எண்ணெய்யைக் குளிக்கும் தண்ணீரில் சிறிது சேர்த்துக் குளித்து வந்தால், சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகளுடன் ஏற்படும் அழற்சி பிரச்சினை தீரும்.

சருமத் தொற்று மற்றும் கருவளையம்:

வியர்வை மற்றும் ஈரப்பதம் காரணமாக சருமத்தில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை குணப்படுத்த, வால்நட் எண்ணெய்யை ஏதேனும் ஒரு மூலிகை எண்ணெய்யுடன் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரலாம்.

பெண்கள் பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது, கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையம்தான். இதற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும். இதை கண்களைச் சுற்றித் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், சில நாட்களிலேயே கருவளையம் மறையும். இதில், உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தின் இளமையை தக்கவைக்கும் தன்மை கொண்டவை.

அரிப்பு மற்றும் பொடுகு:

குளிப்பதற்கு முன்பு வால்நட் எண்ணெய்யை இளம் சூட்டில் உடலில் தடவிக் குளித்தால், பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் குறையும். வால்நட் எண்ணெய்யை தலைப்பகுதியில் உள்ள சருமத்தில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

முடி வளர்ச்சி:

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும். மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும்.

இதுதவிர, புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் தன்மையும் வால்நட் எண்ணெய்யில் இருக்கும் சத்துக்களுக்கு உண்டு. தினமும் வால்நட்டை சாப்பிடுவதால், புற்றுநோய் பாதிப்பு 15 சதவீதம் குறைவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றலும் வால்நட் எண்ணெய்க்கு உள்ளது.

மேலும் செய்திகள்