வேக்சிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
|வேக்சிங் செய்வதற்காக பூசப்படும் மெழுகை எவ்வாறு அகற்றுகிறோம் என்பது முக்கியம். மெழுகை மெதுவாகத் தடவ வேண்டும். பின்னர் அதை அகற்றும்போது ஸ்டிரிப்பை வேகமாகவும், ஒரே சீராகவும் பிடித்து இழுக்க வேண்டும்.
உடலில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு பெண்கள் பயன்படுத்தும் முறைகளில் ஒன்று 'வேக்சிங்'.
அழகு நிலையங்களில் மட்டுமே 'வேக்சிங்' செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது எளிமையான முறையில் வீட்டிலேயே பலர் செய்துகொள்கின்றனர். இவ்வாறு வேக்சிங் செய்யும்போது சற்றே கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம். இல்லையென்றால், சருமத்தில் பாதிப்புகள் உண்டாகக்கூடும். இதைத் தவிர்க்க சில ஆலோசனைகள்:
சருமத்தை தயார்படுத்துதல்:
வேக்சிங் செய்வதற்கு முன்பு, அதற்காக சருமத்தை சரியான முறையில் தயார்படுத்த வேண்டும். இல்லாவிடில், நாம் பயன்படுத்தும் கிரீம், மெழுகு ஆகியவை தோலில் அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.
முதலில் சருமத்தில் இருக்கும் வியர்வை, அழுக்கு ஆகியவற்றை சுத்தமான ஈரத்துணியால் மென்மையாக துடைத்து நீக்க வேண்டும். பிறகு, உலர்ந்த துணியால் ஈரமில்லாத வகையில் சருமத்தைத் துடைக்க வேண்டும்.
உங்கள் சருமத்துக்கு ஏற்ற கிரீம் அல்லது ஜெல்லைப் பயன்படுத்துவது முக்கியம். இது வேக்சிங் செய்த பிறகு சருமம் வறண்டு போவதைத் தடுக்கும். வேக்சிங் செய்யத் தொடங்கும் முன்னர், சருமத்தில் தாராளமாக டால்கம் பவுடர் பூச வேண்டும். இதனால் முடியை எளிதாக அகற்ற முடியும்.
மெழுகைப் பயன்படுத்துதல்:
முடி மற்றும் தோலின் மீது நன்றாகப்படும்படி மெழுகைத் தடவ வேண்டும். அதிகமாகத் தடவினால் முடியை சரியாக அகற்ற முடியாது. எனவே ஒவ்வொரு பகுதியிலும் மெல்லிய அடுக்காக மெழுகைத் தடவ வேண்டும். முடியை அகற்றும்போது, ஸ்டிரிப்பை வேகமாக எதிர்திசையில் இழுக்க வேண்டும்.
சீரான வெப்பநிலை:
மெழுகு, சூடு குறைவாக இருந்தால் சருமத்தில் திறம்பட ஒட்டாது. அதேசமயம், அதிக சூடாக இருந்தால் தோலில் காயம் உண்டாக நேரிடும். நீங்கள் ஒருவேளை 'கூல் வேக்சிங்' பயன்படுத்துவதாக இருந்தால், அறை வெப்பநிலையில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். இது பயன்படுத்த எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.
மெழுகை சருமத்தில் தடவுவதற்கு முன்பு காயங்கள், சிராய்ப்பு, புண் என ஏதேனும் உள்ளதா என்று கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால் அவற்றை 'பேண்டேஜ்' கொண்டு மூட வேண்டும். அவ்வாறு செய்யாமல் சூடான மெழுகை அப்பகுதியில் தடவி வேகமாக இழுக்கும்போது, காயங்கள் மேலும் அதிகமாகக்கூடும்.
இழுக்கும் முறை:
வேக்சிங் செய்வதற்காக பூசப்படும் மெழுகை எவ்வாறு அகற்றுகிறோம் என்பது முக்கியம். மெழுகை மெதுவாகத் தடவ வேண்டும். பின்னர் அதை அகற்றும்போது ஸ்டிரிப்பை வேகமாகவும், ஒரே சீராகவும் பிடித்து இழுக்க வேண்டும்.
வேக்சிங் செய்யும் முறையைப் பற்றி தகுந்த நிபுணரிடம் முழுவதுமாக தெரிந்து கொண்ட பின்பு, வீட்டில் சுயமாக செய்து கொள்வது பாதுகாப்பானது.