< Back
ஆரோக்கியம் அழகு
மணப்பெண்களுக்கான சருமப் பராமரிப்பு வழிகள்
ஆரோக்கியம் அழகு

மணப்பெண்களுக்கான சருமப் பராமரிப்பு வழிகள்

தினத்தந்தி
|
4 Sept 2022 7:00 AM IST

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்

திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண்கள் அனைவரும் சந்தோஷம், பரபரப்பு, எதிர்பார்ப்பு, குழப்பம் என பல்வேறு உணர்வுகள் கலந்த மனநிலையில் இருப்பார்கள். மேலும் திருமணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் அலைச்சல் மற்றும் பணிச்சுமை ஆகியவையும் சிரமத்தை தரும். இந்த பாதிப்புகள் அவர்களின் சருமத்தில் பிரதிபலிக்கக்கூடும். எனவே, 3 மாதத்திற்கு முன்பாகவே, சருமப் பராமரிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.

இதோ சில சரும பராமரிப்பு முறைகள்:

 சருமப் பராமரிப்பில் முதலில் செய்ய வேண்டியது, நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் ஆகும். இதன் மூலம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் கழிவுகள் வெளியேறி சருமம் பொலிவு பெறும்.

 தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்.

 வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம். காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தில் மென்மையாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். தண்ணீரில் ஊற வைத்தக் கொண்டைக்கடலையுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கொரகொரப்பாக அரைத்து, அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் இறந்த செல்கள் அகன்று புதிய செல்கள் உருவாகி சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

 கண்ணுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது அவசியம். இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் முக்கியமானது. கூடுதலாக 'ஐ கிரீம்' பயன்படுத்தலாம் அல்லது கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி உள்ள சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இது கருவளையங்கள் நீங்கி கண்கள் பளிச்சிட உதவும்.

திருமணம் நெருங்கும் நாட்களில், சரும பராமரிப்பு முறைகள் மற்றும் மேக்கப் போன்றவற்றில் எதையும் புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டாம். சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தால், 3 மாதத்திற்கு முன்பாகவே பயன்படுத்த ஆரம்பிப்பது நல்லது.

மேலும் செய்திகள்