உங்கள் கூந்தலுக்கேற்ற ஷாம்பு வகைகள்
|உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இவற்றில் பாதுகாப்பான மூலப் பொருட்கள் மட்டுமே சேர்க்கப்படுவதால் உடல் ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது.
கூந்தல் பராமரிப்புக்காக உபயோகிக்கும் பல ஷாம்புகளில் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் வாசனை திரவங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் இருக்கும் ரசாயனங்கள் பல்வேறு பக்க விளைவுகளை உண்டாக்கக்கூடும். அதனை தவிர்த்து, உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இவற்றில் பாதுகாப்பான மூலப் பொருட்கள் மட்டுமே சேர்க்கப்படுவதால் உடல் ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது.
அடர்த்தியை அதிகரிக்கும் தேங்காய்ப்பால் ஷாம்பு
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பால் - ¼ கப்
காஸ்டில் சோப் - ¼ கப்
அரோமா எண்ணெய் - 20 துளிகள்
(பெப்பர்மிண்ட், லாவெண்டர், ரோஸ்மேரி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று)
ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய் - ½ ஸ்பூன்
செய்முறை:
எல்லாப் பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலந்துகொள்ளுங்கள். இந்த ஷாம்புவை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொலிவை அதிகரிக்கும் ஓட்ஸ் ஷாம்பு
தேவையான பொருட்கள்:
பொடித்த ஓட்ஸ் - ¼ கப்
சோளமாவு - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
சுத்தமான தண்ணீர் - ¼ கப்
செய்முறை:
கொடுக்கப்பட்ட பொருட்களை நன்றாகக் கலந்து தலையில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.
வலிமையை அதிகரிக்கும் முட்டை ஷாம்பு
தேவையான பொருட்கள்:
முட்டை - 1
பேக்கிங் சோடா - 3 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
ஆப்பிள் சிடர் வினிகர் - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
முட்டை நுரைக்கும் வரை நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் பேக்கிங் சோடா, ஆலிவ் எண்ணெய், ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றையும் கலந்து உடனடியாகப் பயன்படுத்துங்கள்.
பளபளப்பு தரும் கொண்டைக்கடலை ஷாம்பு
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை மாவு - 2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - ½ டீஸ்பூன்
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதை தலையில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளியுங்கள்.