< Back
ஆரோக்கியம் அழகு
புத்துணர்ச்சி தரும் ஏரியல் யோகா
ஆரோக்கியம் அழகு

புத்துணர்ச்சி தரும் ஏரியல் யோகா

தினத்தந்தி
|
16 July 2023 7:00 AM IST

ஏரியல் யோகா பயிற்சி செய்வதற்கு, முதலில் அடிப்படை யோகா பயிற்சிகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது போல, மெல்ல மெல்ல பயிற்சிகள் தொடங்கும். படுத்த நிலை, உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, தலை கீழாக தொங்கிய நிலை என பல்வேறு முறைகளில் பயிற்சிகள் கொடுக்கப்படும்.

நோய்களை தவிர்த்து, ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு, உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதில் நம்முடைய பாரம்பரிய யோகா பயிற்சிக்கு முக்கிய இடம் உண்டு.

தற்கால சூழ்நிலையை மனதில் கொண்டு யோகாவிலும் பல்வேறு புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. அந்த வகையில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது 'ஏரியல் யோகா'. இது பற்றி விரிவாக விளக்குகிறார் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஏரியல் யோகா பயிற்சியாளர் ஆர்த்தி.

"யோகா மற்றும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிகளை கலந்து வடிவமைக்கப்பட்டதுதான் ஏரியல் யோகா. இது அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர் கிறிஸ்டோபர் ஹாரின்சன் என்பவரால் 1991-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

பாரம்பரிய யோகா பயிற்சியில், தரையில் யோகா விரிப்பை விரித்து அதன் மேல் பயிற்சி செய்வார்கள். ஆனால் ஏரியல் யோகாவில் துணியில் தூளி (தொட்டில்) கட்டி அதில் படுத்தவாறும், தொங்கியவாறும் யோகா பயிற்சிகளை செய்கிறார்கள்.

ஏரியல் யோகா பயிற்சி செய்வதற்கு, முதலில் அடிப்படை யோகா பயிற்சிகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது போல, மெல்ல மெல்ல பயிற்சிகள் தொடங்கும். படுத்த நிலை, உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, தலை கீழாக தொங்கிய நிலை என பல்வேறு முறைகளில் பயிற்சிகள் கொடுக்கப்படும்.

இவ்வாறு பயிற்சி செய்வதால் உடல் வலி இருக்காது. உடலும், மனமும் புத்துணர்ச்சி அடையும். ஏரியல் யோகாவை, 'எக்ஸ்பிரஸ் யோகா' என்றும் அழைப்பார்கள். பாரம்பரிய யோகா பயிற்சியை 45 நிமிடங்கள் செய்தால் கிடைக்கக்கூடிய பலனை, இதை 15 நிமிடங்கள் செய்தாலே பெற்று விடலாம்.

ஏரியல் யோகா பயிற்சி செய்வதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை. அடிப்படை யோகா பயிற்சிகளை பற்றிய புரிதலும், கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும் இருந்தாலே போதுமானது.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், ஹார்மோன் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பயிற்சி சிறந்தது. ஏரியல் யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடலையும், மனதையும், இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

ஆரம்பத்தில் ஏரியல் யோகா பயிற்சி செய்யும்போது ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். தொடர்ந்து பயிற்சி செய்யும்போது இவை தானாகவே சரியாகிவிடும். இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏரியல் யோகா செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஏரியல் யோகா பயிற்சி செய்வதால் உடல் வலி குறையும். செரிமானம் சீராகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சருமம் பொலிவாகும். மன அழுத்தம் குறையும். ஹார்மோன் சுரப்பு சமநிலை அடையும். நினைவாற்றல் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆண்களை விட பெண்கள் ஏரியல் யோகா கற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார் பயிற்சியாளர் ஆர்த்தி.

மேலும் செய்திகள்