அழகை அதிகரிக்கும் கடுகு எண்ணெய்
|தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் பொலிவில்லாத கூந்தலுக்கு கடுகு எண்ணெய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும்.
கடுகு எண்ணெய்யை பலரும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால், இதை மேற்பூச்சாகவும் உபயோகிக்க முடியும். இந்த எண்ணெய்யில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்டுகள், சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக் அலிக், பால்மிடிக் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன.
சரும நிறம்:
கடுகு எண்ணெய்யில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது பிரீ-ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும். இதில், சிறந்த ஆக்சிஜனேற்றங்கள் உள்ளதால் சரும செல்களை மேம்படுத்தும். இளமையிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கும் ஆற்றலும் இந்த எண்ணெய்க்கு உண்டு. இதை தொடர்ந்து முகத்தில் தடவும்போது மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளை குறைக்க உதவும். தோல் அமைப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்தும். முகத்தில் உள்ள கருந்திட்டுகள், கரும்புள்ளிகளை குறைக்க உதவுவதுடன், முகத்திற்கு இயற்கையான பளபளப்பையும் தரும்.
சன்ஸ்கிரீன்:
கடுகு எண்ணெய்யில் மாய்ஸ்சுரைசர் பண்புகள் உள்ளன. அவை உலர்ந்த மற்றும் வெடிப்பு ஏற்பட்ட உதடுகளை குணப்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும். இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலங்கள், இறந்த சரும செல்களை அகற்றவும், வெயிலினால் முகம் கறுத்துப்போவதை தடுக்கவும் உதவி புரியும். இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, இயற்கையான சன்ஸ்கிரீன்போல் செயல்பட்டு, சூரியனின் புறஊதா கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்பை தடுக்கும்.
முடி வளர்ச்சி:
தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் பொலிவில்லாத கூந்தலுக்கு கடுகு எண்ணெய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும்.
இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் வழுக்கை விழுவது மற்றும் ஸ்கால்ப் சார்ந்த பிரச்சினைகளுக்குச் சிறந்த தீர்வாக அமையும். கடுகு எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவி வரும்போது பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
பாத வெடிப்பு:
பலருக்கும் வறட்சி காரணமாக கால்களில் வெடிப்பு, நகங்கள் வெடிப்பு, தோல் உரிதல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மழை மற்றும் குளிர்காலங்களில் இது மேலும் அதிகரிக்கும். இதைத் தவிர்க்க கடுகு எண்ணெய்யை பாதங்களில் பூசி வரலாம்.
கொழுப்பைக் குறைக்கும்:
கடுகு எண்ணெய் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்றுப்பகுதியில் கொழுப்பு தேங்கி உள்ளவர்கள், அப்பகுதியில் இந்த எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தினமும் தடவி வரலாம். இதுபோன்று மசாஜ் செய்யும்போது, உடலில் இருந்து ஒருவித சூடு வெளியேறும். இது உடலில் பல நாட்களாக தேங்கியிருக்கும் கெட்டக் கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.