ஆரோக்கியமான சருமத்துக்கு 'மாம்பழ பேஸ் மாஸ்க்'
|மாம்பழத்தில் உள்ள வைட்டமின் பி, வயது முதிர்வினால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி, ‘கொலாஜென்’ உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, தோலின் இளமைத் தன்மையைப் பராமரிக்கிறது.
கோடைகாலத்தின் வரவுகளில் ஒன்று மாம்பழம். இதில் மாம்பழச்சாறு, ஜாம், ஐஸ்கிரீம், அல்வா, பர்பி என்று பலவிதமான உணவுகள் தயாரித்து ருசித்திருப்பீர்கள். சாப்பிடுவதற்கு சுவையான மாம்பழங்கள் உங்கள் சருமத்திற்கும் சிறந்தது. முகப்பருக்கள், சருமம் கருமை அடைதல் என கோடைகாலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளைத் தீர்க்க மாம்பழத்தை பயன்படுத்தலாம். அவ்வாறு, சருமத்துக்கு நன்மை தரும் மாம்பழ பேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரிப்பதைப் பற்றி இங்கே காணலாம்.
முகப்பருவை நீக்குவதற்கு:
மாம்பழக் கூழ் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையினைக் குறைத்து, முகப்பருக்கள் உண்டாகாமல் தடுக்கிறது. மாம்பழ பேஸ் மாஸ்க்கினைத் தயார் செய்வதற்கு ஒரு தேக்கரண்டி அரைத்த மாம்பழத்
துடன், சம அளவு தயிர் மற்றும் தேன் கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர வைக்கவும். பின்னர் கழுவினால், சருமம் எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறிவிடும். முகக் கருமைக்கான தீர்வுவெயில் காரணமாக சருமத்தில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு, பலவகையான கிரீம்களை உபயோகித்தும் பலன் அடையாதவர்கள் மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
1 தேக்கரண்டி மாம்பழக் கூழ், 2 தேக்கரண்டி கடலை மாவு, 2 தேக்கரண்டி அரைத்த பாதாம் மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கெட்டியாக மாறும் வரை கலந்து கொள்ளவும். பின்னர், இந்தக் கலவையை முகத்திலும், வெயிலால் பாதிப்படைந்த பகுதிகளிலும் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பின்பு, குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவவும்.
வாரத்திற்கு மூன்று முறை இந்த பேஸ் மாஸ்க்கை உபயோகித்தால் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
தோலின் இளமையைப் பாதுகாப்பதற்கு:
மாம்பழத்தில் உள்ள வைட்டமின் பி, வயது முதிர்வினால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி, 'கொலாஜென்' உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, தோலின் இளமைத் தன்மையைப் பராமரிக்கிறது.
இதற்கான பேஸ் மாஸ்க்கினை தயாரிப்பதற்கு மாம்பழம் மற்றும் முட்டையினை பயன்படுத்தலாம். இவை சருமத்தை இறுக்கமாக்கி வயதான தோற்றத்தைத் தடுக்கும். 2 முட்டையின் வெள்ளைக் கருவினைப் பிரித்தெடுத்து, நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.
அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவையை முகம் முழுவதும் தடவவும். இந்த பேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தும்போது கண்களுக்கு மிக அருகில் தடவுவதை தவிர்க்கவும். முகத்தில் பேஸ்பேக் உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சரும வறட்சியினைத் தடுப்பதற்கு:
மாம்பழ பேஸ் மாஸ்க் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதற்கு உதவும். இதற்காக 1 தேக்கரண்டி அவகேடா பழக்கூழுடன், 1 தேக்கரண்டி மாம்பழக்கூழ் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி, உலர்ந்த பின்பு கழுவவும்.