< Back
ஆரோக்கியம் அழகு
மேக்கப் பிரஷ் பராமரிப்பு
ஆரோக்கியம் அழகு

மேக்கப் பிரஷ் பராமரிப்பு

தினத்தந்தி
|
8 Oct 2023 7:00 AM IST

மேக்கப் பிரஷ்களின் இழைகள், இயற்கையாக கிடைக்கும் ரோமங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருப்பது நல்லது. இவை, மென்மையாகவும், முகத்திற்கு பயன்படுத்த ஏற்ற வகையிலும் இருக்கும்.

ழகை மேம்படுத்திக் காட்டுவதற்காக பெரும்பாலான பெண்கள் மேக்கப் செய்து கொள்கிறார்கள். அதற்காக அவர்கள் தினமும் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களை, உபயோகப்படுத்திய பிறகு முறையாக பராமரிப்பதில்தான் சருமத்தின் ஆரோக்கியமும் அடங்கியுள்ளது.

குறிப்பாக, அடிக்கடி பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்ஷை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகள் அதில் பெருகி சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேக்கப் பிரஷ்ஷை பராமரிக்கும் சில வழிகள்:

அடிக்கடி கழுவுதல்:

ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் மேக்கப் பிரஷ்களை, சுத்தம் செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது அவற்றை தண்ணீரில் கழுவ வேண்டும். அதிக அளவு கிரீம் மற்றும் திரவப் பொருட்களை உபயோகிக்கும்போது, ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் மேக்கப் பிரஷ்களை நன்றாக துடைத்து வைக்க வேண்டும்.

முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கென பிரத்யேகமாக மேக்கப் பிரஷ்களை வைத்திருப்பது சிறந்தது. சருமத்தின் தன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சில அழகு சாதனப் பொருட்கள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதுபோன்ற சமயங்களில், மற்றவர் பயன்படுத்திய மேக்கப் பிரஷ்ஷை, மீண்டும் உங்கள் சருமத்தில் பயன்படுத்தும்போது நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.

சுத்தம் செய்யும் முறை:

மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்வதற்கென பிரத்யேகமாக பிரஷ் கிளீனர்கள் உள்ளன. இவை பிரஷ்களில் உள்ள அழுக்குகளையும், பிசுபிசுப்பு தன்மையையும் முழுமையாக நீக்கும். இதுதவிர, மென்மையான சோப்பு கொண்டு மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்யலாம். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு அல்லது ஷாம்பு கொண்டு இவற்றை சுத்தம் செய்வது நல்லது. மேக்கப் பிரஷ்ஷின் ஒவ்வொரு இழையையும் சுத்தம் செய்யும் வகையில், 'பிரஷ் மேட்' கடைகளில் கிடைக்கிறது. இது, பிரஷ்ஷில் படிந்துள்ள கிரீம் மற்றும் பிசுக்குகளை முழுமையாக நீக்கும்.

மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்யும்போது, தண்ணீரில் நீண்ட நேரம் அவற்றை ஊறவைக்கக் கூடாது. இவ்வாறு செய்வது அதன் இழைகளை பிணைக்கும் பசையைத் தளர்த்தி, அவற்றை உதிரச் செய்யும். மேக்கப் பிரஷ்களை சுத்தம் செய்த பின்பு, அப்படியே ஈரத்தோடு பயன்படுத்தாமல், நன்றாக உலர்ந்த பின் உபயோகிக்க வேண்டும். மேக்கப் பிரஷ்ஷில் உள்ள அதிகப்படியான நீரை விரல்களை பயன்படுத்தி மென்மையாக பிழிந்து எடுக்க வேண்டும். இழைகளைப் பிடித்து இழுப்பதை தவிர்க்க வேண்டும்.

உலர்த்தும் முறை:

மேக்கப் பிரஷ்களை கழுவிய பிறகு, அவற்றை ஒரு பருத்தி துண்டில் அல்லது டிரேவில் போதுமான இடைவெளிவிட்டு அடுக்கி சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைத்து உலர்த்த வேண்டும். மேக்கப் பிரஷ்களை அடுக்கி வைக்கும் ஹோல்டர்களும் சுத்தமாக இருக்க வேண்டும்.

மேக்கப் பிரஷ்களை தேர்ந்தெடுத்தல்:

அடர்த்தி: கிரீம், பவுண்டேஷன், பவுடர் ஆகியவற்றை முகம் முழுவதும் பூசுவதற்கு ஏற்ற வகையில் மேக்கப் பிரஷ்ஷில் உள்ள இழைகள் மிதமான அடர்த்தியோடு மென்மையாக இருக்க வேண்டும்.

தரம்: மேக்கப் பிரஷ்களின் இழைகள், இயற்கையாக கிடைக்கும் ரோமங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருப்பது நல்லது. இவை, மென்மையாகவும், முகத்திற்கு பயன்படுத்த ஏற்ற வகையிலும் இருக்கும்.

மேலும் செய்திகள்