< Back
ஆரோக்கியம் அழகு
உப்பும், சில உண்மைகளும்...
ஆரோக்கியம் அழகு

உப்பும், சில உண்மைகளும்...

தினத்தந்தி
|
2 April 2023 7:00 AM IST

தாகம் எடுக்கும் நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் அலட்சியமாக இருந்தால், ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கோபம் ஏற்படக்கூடும்.

ணவின் சுவையை அதிகரிப்பதில் உப்புக்கு அதிக பங்கு உண்டு. இதன் ரசாயனப் பெயர் சோடியம் குளோரைடு. தயாரிக்கும் உணவில் உப்பின் அளவு குறைந்தாலும், கூடினாலும் அந்த உணவை நம்மால் ருசிக்க முடியாது.

உடலின் இயக்கம் சீராக செயல்படுவதற்கு உப்பு அவசியம். இது செரிமானத்தையும், மூளையின் செயல்திறனையும் சீராக்குகிறது. நீரின் சமநிலையை ஒழுங்குபடுத்தி, தசைகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. நரம்பு தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.

ஆரோக்கியமானவர்கள் தினமும் 1,500 முதல் 2,300 மில்லி கிராம் அளவு வரை உப்பை சேர்த்துக்கொள்ளலாம். இது ஒரு டேபிள் ஸ்பூன் அளவாகும்.

ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 'ஒரு கல் உப்பு' மட்டுமே சேர்த்து உணவு வழங்கலாம். தாய்ப்பால் பருகும் குழந்தைகளுக்கு தேவையான உப்பு அதிலேயே இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு 1,300 மில்லிகிராம் அளவு உப்பு போதுமானது.

ரத்த அழுத்தம், உடல் பாகங்களில் வீக்கம், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு, இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்புடன் கூடிய நெப்ரோடிக் நோய் அறிகுறி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில், பெண்கள் உணவில் சேர்த்து கொள்ளும் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் முகம், கை, கால், கணுக்கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த சமயத்தில், அதிக அளவிலான உப்பை சேர்த்துக்கொள்ளும்போது, அது 'எடிமா' எனும் வீக்க நோயை உண்டாக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் உணவில் வழக்கத்தை விட குறைந்த அளவில் உப்பை சேர்ப்பது சிறந்தது. அதிகபட்சமாக 1,800 மில்லி கிராம் அளவு சாப்பிடலாம்.

மாதவிடாய் காலத்தில், அதிக அளவு உப்பு சாப்பிடுவதால் வயிற்று பிடிப்பு, உடலில் திரவம் தங்குதல், உடல் வீக்கம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே அந்த சமயத்தில் 1,500 முதல் 1,900 மில்லிகிராம் அளவு மட்டுமே உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்ளும்போது, நிறைய தண்ணீர் குடிக்கத் தோன்றும். தாராளமாக தண்ணீர் குடித்தால், தேவையற்ற சோடியம் சிறுநீர் வழியாக வெளியேறும்.

தாகம் எடுக்கும் நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் அலட்சியமாக இருந்தால், ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கோபம் ஏற்படக்கூடும். தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும் பெண்கள், தண்ணீர் தாராளமாக குடிப்பதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்ற முடியும்.

30 வயதை கடந்த பெண்கள், தங்கள் உடம்பில் சோடியத்தின் அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். சோடியம் ரத்தத்தில் அதிகமாக கலந்திருப்பது தெரிந்தால், அதை குறைக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிடில் உடல் வீக்கம், தசைப் பிடிப்புகள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மேலும் செய்திகள்