காய்கறி, பழங்களில் சத்துமாவு தயாரிக்கலாம்
|பீட்ரூட், செவ்வாழை, ஆப்பிள், கேரட் போன்றவற்றை மால்ட் பவுடராக தயார் செய்து பாலில் கலந்து மில்க் ஷேக் போல கொடுத்தால் குழந்தைகள் விரும்பி ருசிப்பார்கள்.
குழந்தைகளை காய்கறி, பழங்கள் சாப்பிட வைப்பது பெற்றோர்கள் பலருக்கு சவாலான செயலாக இருக்கிறது. சத்துள்ள காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, அவற்றை 'மால்ட்' (சத்துமாவு) வடிவில் பாலில் கலந்து கொடுக்கலாம். அதன் மூலம், காய்கறிகள் மற்றும் பழங்களின் முழுமையான சத்துக்கள் அவர்களுக்கு கிடைக்கும்.
பீட்ரூட், செவ்வாழை, ஆப்பிள், கேரட் போன்றவற்றை மால்ட் பவுடராக தயார் செய்து பாலில் கலந்து மில்க் ஷேக் போல கொடுத்தால் குழந்தைகள் விரும்பி ருசிப்பார்கள். இந்த மால்ட் வகைகளை உங்கள் தேவைக்கு பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல், விற்பனையும் செய்யலாம். இது பெண்களுக்கு லாபகரமான சுயதொழிலாக இருக்கும்.
மால்ட் வகைகளின் அடிப்படை தயாரிப்பு முறை ஒன்று தான். இங்கு 'பீட்ரூட் மால்ட்' செய்முறையைக் காண்போம்.
பீட்ரூட் மால்ட்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - ½ கிலோ
நாட்டுச் சர்க்கரை - ½ கிலோ (ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும்)
பாதாம் - 100 கிராம்
முந்திரி - 5 கிராம்
ஏலக்காய் - 6
செய்முறை:
பாதாம் பருப்பை சூடான நீரில் போட்டு 4 முதல் 5 நொடிகள் கழித்து வெளியே எடுக்கவும். பின்பு அவற்றின் மேல் தோலை நீக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் பாதாமை கொட்டி மிதமான சூட்டில் வறுக்கவும். பின்னர் அதனுடன் முந்திரியை சேர்த்து மீண்டும் வறுக்கவும். சில நொடிகள் கழித்து அதில் ஏலக்காயை சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். இவற்றை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆறவைக்கவும். பின்னர் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
பீட்ரூட்டின் மேல் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் அவற்றை மிக்சியில் போட்டு, ½ கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் அகன்ற இரும்பு வாணலியை வைத்து அது சூடானதும், அதில் பீட்ரூட் விழுது மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இந்தக் கலவை, அல்வா பதத்துக்கு வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து கலவை கெட்டியாகி மேலே தெறிக்கத் தொடங்கும். அப்போது அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.
பீட்ரூட் கலவை சுருண்டு ஒட்டாமல் வரும்போது, அதில் பாதாம் மற்றும் முந்திரி பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இப்போது அடுப்பை அணைத்து விட்டு, மின்விசிறி காற்றில் பீட்ரூட் கலவையை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். 20 நிமிடங்கள் கழித்து அதில் இருக்கும் தண்ணீர் வற்றி சிறிய கட்டிகளுடன் குருணை போல் இருக்கும். அதை சிறிது சிறிதாக மிக்சியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
இந்தப் பொடியை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேகரித்து தேவையானபோது பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
பீட்ரூட் மால்ட் பொடியை சூடான பாலில் கலந்து பருகலாம். குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைத்தும் சுவைக்கலாம். இதுபோல கேரட், ஆப்பிள், செவ்வாழை 'மால்ட்' தயாரிக்கலாம்.
சந்தைப்படுத்தும் முறை:
முதலில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து அவர்களின் பின்னூட்டங்களை அறிந்து கொள்ளுங்கள். பின்னர் சிறிய அளவில் சந்தைப்படுத்தி, வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப விற் பனையை அதிகரிக்கலாம். சந்தைப்படுத்தும் முன்பு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. (FSSAI) போன்ற சான்றிதழ்களைப் பெற வேண்டும்.