சருமத்துக்கு ஏற்ற பவுண்டேஷன்
|சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், சருமத்துக்கு பாதிப்பு உண்டாக்கும் மூலப்பொருட்கள் சேர்க்காத பவுண்டேஷனைப் பயன்படுத்துவது நல்லது.
மேக்கப், பெண்களின் அழகை மட்டுமில்லாமல், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது. முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளுக்கு மேக்கப் போட்டு செல்வதன் மூலம் தங்களால் சிறப்பாக செயலாற்ற முடியும் என்பது பல பெண்களின் நம்பிக்கையாகும்.
மேக்கப்பில் பல வகை உள்ளது. ஆனால், எல்லாவற்றுக்கும் அடிப்படையான அழகு சாதனப்பொருள் 'பவுண்டேஷன்'. இதை சரியாக உபயோகித்தால் மட்டுமே 'மேக்கப்' கச்சிதமாக அமையும். உங்கள் சரும நிறம், தன்மை போன்றவற்றுக்கு பொருந்தும் வகையிலான பவுண்டேஷனைத் தேர்வு செய்வது முக்கியம். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
சரும வகை:
எண்ணெய்ப்பசை அதிகமாக இருக்கும் சருமத்தை 'ஆயிலி ஸ்கின்' என்றும், வறட்சியான சருமத்தை 'டிரை ஸ்கின்' என்றும், இரண்டு தன்மையும் கலந்து இருக்கும் சருமத்தை 'காம்பினேஷன் ஸ்கின்' என்றும், உணர்திறன் அதிகமாக இருக்கும் சருமத்தை 'சென்சிடிவ் ஸ்கின்' என்றும் வகைப்படுத்தலாம். இதில் உங்கள் சருமம் எத்தகையது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
'ஆயிலி ஸ்கின்' கொண்டவர்கள் 'ஆயில் பிரீ மேட் பினிஷ்' பவுண்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது. 'டிரை ஸ்கின்' உள்ளவர்கள் 'மாய்ஸ்சுரைசிங்' பவுண்டேஷனைப் பயன்படுத்தலாம். 'காம்பினேஷன் ஸ்கின்' இருப்பவர்கள் உங்கள் சருமத் தேவைக்கு ஏற்ப இரண்டு பவுண்டேஷனையும் கலந்து பயன்படுத்த வேண்டும். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், சருமத்துக்கு பாதிப்பு உண்டாக்கும் மூலப்பொருட்கள் சேர்க்காத பவுண்டேஷனைப் பயன்படுத்துவது நல்லது.
சரும நிறம்:
பலருக்கு முகம் மற்றும் கழுத்தின் நிறம் (ஸ்கின் டோன்) வெவ்வேறாக இருக்கும். இவர்கள் வழக்கம்போல மணிக்கட்டுப் பகுதியின் உட்புறம் பூசிப் பார்ப்பதால், பொருத்தமான பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க முடியாது. அதற்குப்பதிலாக முகம் மற்றும் கழுத்தை இணைக்கும் தாடைப் பகுதியில் பவுண்டேஷனைப் பூசிப்பார்த்து வாங்குவது சிறந்தது.
பல பவுண்டேஷன்கள் நேரம் அதிகரிக்கும்போது சருமத்துடன் வினைப்புரிந்து 'ஆக்சிடேஷன்' அடையும் தன்மை கொண்டவை. இதனால் அவற்றின் நிறம் மாறும். எனவே பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்கும்போது தாடையில் பூசி 5 முதல் 10 நிமிடங்கள் காத்திருந்து, அவற்றின் நிறம் உங்கள் சருமத்துடன் பொருந்துகிறதா என்பதை சோதித்த பின்பு வாங்குங்கள்.
அண்டர்டோன்:
உங்கள் சருமத்தின் மேற்பரப்புக்கு அடியில் இருக்கும், நுட்பமான நிறத்தை தான் 'அண்டர்டோன்' என்கிறோம். மஞ்சள் அல்லது வார்ம், ரோஸி அல்லது கோல்ட், நியூட்ரல் என மூன்று விதமான அண்டர்டோன்கள் உள்ளன. ஸ்கின் டோன் மட்டுமின்றி அண்டர்டோனையும் கருத்தில் கொண்டு பவுண்டேஷனைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
பெரும்பாலான பவுண்டேஷன்கள், எந்த அண்டர்டோனின் கீழ் வரும் என்பது அதன் வெளிப்பகுதியிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். பவுண்டேஷனின் கோடில் 'N' என்று ஆரம்பித்தால் அது நியூட்ரல், 'C' என்பது கோல்ட் மற்றும் 'W' என்பது வார்ம் அண்டர்டோனை குறிக்கும்.
பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்கும்போது, அழகுக்கலை நிபுணரிடம் ஆலோசித்து உங்கள் சருமத்துக்கு ஏற்றதை வாங்குவது சிறந்தது.