< Back
ஆரோக்கியம் அழகு
பெண்களை அதிகம் பாதிக்கும் உலர் கண் நோய்
ஆரோக்கியம் அழகு

பெண்களை அதிகம் பாதிக்கும் உலர் கண் நோய்

தினத்தந்தி
|
15 Oct 2023 7:00 AM IST

காற்றில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் உலர் கண் நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். குறிப்பாக ஏ.சி. பயன்பாட்டின்போது நம்மைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை குறைந்து, ஈரப்பதம் அதிகரிக்கும். இது கண் இமைகளில் உள்ள சுரப்புகளின் உற்பத்தியை தடுத்து, விழி நீர் படலத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

ம் கண்களின் வெளிப்புற அடுக்கில் எண்ணெய்யும், மைய அடுக்கில் நீரும், உள் அடுக்கில் புரதமும் இருக்கும். இந்த மூன்று அடுக்குகளின் தரம் அல்லது அளவில் உண்டாகும் மாற்றமே உலர் கண் நோயாகும். கண்களின் சீரான தன்மை மற்றும் செயல்பாட்டிற்கு அதில் சுரக்கக்கூடிய கண்ணீரின் அளவு அடிப்படையானதாகும். உலர் கண் நோய் ஏற்படும்போது கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.

அறிகுறிகள்:

கண்களில் எரிச்சல், வறட்சி, அரிப்பு, வலி உணர்வு, கனம், கண்களில் நீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை, புத்தகம் வாசிப்பதில் சிரமம் ஏற்படுவது போன்றவை உலர் கண் நோய்க்கான அறிகுறிகளாகும்.

காரணங்கள்:

எந்த ஒரு பொருளையும் தொடர்ந்து நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், சீரற்ற ஹார்மோன் சுரப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்கள் காரணமாகவும் உலர் கண் நோய் ஏற்படும்.

தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும்போதும், மாசுக்கள் கண்களில் தொடர்ந்து படும் போதும் விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.

காற்றில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் உலர் கண் நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். குறிப்பாக ஏ.சி. பயன்பாட்டின்போது நம்மைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை குறைந்து, ஈரப்பதம் அதிகரிக்கும். இது கண் இமைகளில் உள்ள சுரப்புகளின் உற்பத்தியை தடுத்து, விழி நீர் படலத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

தீர்வு:

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

கண்களுக்கான பயிற்சிகளை செய்ய வேண்டும். கண் பயிற்சிகள் செய்யும்போது ஆரம்ப காலத்தில் தலைவலி உண்டாகலாம். இந்த பயிற்சிகளை, பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் செய்வது நல்லது.

நீங்கள் இருக்கும் அறையில் ஒரு அகலமான கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். இது அறையில் உள்ள காற்றை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

3 மணி நேரத்திற்கு ஒருமுறை குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவலாம். இது சருமம் நீரேற்றத்துடன், ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு, கண்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் சோர்வை நீக்கும்.

சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 10 வினாடிகளுக்கு ஒருமுறை கண்களை சிமிட்டுவது அவசியமானது.

வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவது நல்லது.

வைட்டமின் 'ஏ' நிறைந்த உணவுகள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

குளிர்ந்த அல்லது அதிக வெப்பநிலை உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நேரடியாக கண்ணில் வேகமான காற்று படும்படி இருப்பதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்