பாசுமதி அரிசியின் நன்மைகள்
|கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரைநோயைத் தவிர்க்க, கர்ப்பிணிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பாசுமதி அரிசியை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானக் கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.
பாசுமதி என்ற சொல்லுக்கு இந்தி மொழியில் 'நறுமணம்' என்று பொருளாகும். இந்த அரிசியில் இயற்கையாக அமைந்திருக்கும் வாசனையே இதன் பெயருக்கு காரணமாக அமைந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இமயமலை பகுதிகளில் பாசுமதி அரிசி பயன்பாட்டில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாசுமதி அரிசி, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
ஒரு கப் அளவு வேகவைத்த பாசுமதி அரிசியில் 210 கிராம் கலோரிகள், 46 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 7 கிராம் நார்ச்சத்து உள்ளது.
பாசுமதி அரிசியில், வெள்ளை மற்றும் பழுப்பு என இரண்டு வகை உண்டு. வெள்ளை பாசுமதி அரிசியில் வைட்டமின் பி1, வைட்டமின் பி6, தாமிரம், போலேட், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
பழுப்பு பாசுமதி அரிசியில் நார்ச்சத்து, பாஸ்பரஸ், தயமின், துத்தநாகம், வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளடங்கி இருக்கும்.
பெரும்பாலான அரிசி வகைகள், குறிப்பாக, வெள்ளை அரிசி உயர் கிளைசிமிக் குறியீட்டைக் கொண்டிருக்கிறது. இதனால் சர்க்கரை நோயாளிகள் அரிசியை உணவில் சேர்ப்பதை தவிர்க்கின்றனர். பாசுமதி அரிசியில் குறைவான கிளைசிமிக் குறியீடு இருப்பதால், இதை தினமும் குறிப்பிட்ட அளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பாசுமதி அரிசியின் குறைவான கிளைசிமிக் குறியீடு, கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கும் பெண்களுக்கு இன்சுலின் உணர்த்திறனில் நேர்மறையான தாக்கத்தை உண்டாக்கி, அந்த பாதிப்பை கணிசமாக குறைக்கிறது.
கர்ப்பகாலத்தில் வரும் சர்க்கரைநோயைத் தவிர்க்க, கர்ப்பிணிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பாசுமதி அரிசியை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானக் கழிவுகளை எளிதில் வெளியேற்றும். உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து நலம் பயக்கும்.
சாதாரண வெள்ளை அரிசிக்கு பதிலாக பாசுமதி அரிசியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது சருமத்தில் ஏற்படும் முதுமைக்கான அறிகுறிகளை குறைக்கும். சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். சருமப் பராமரிப்புக்கான பல்வேறு அழகு சாதனப் பொருட்களில் பாசுமதி அரிசியை சேர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.