கூந்தலை வலுவாக்கும் வாழைப்பழ மாஸ்க்
|கூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க் பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைவதோடு, தலைமுடியின் பளபளப்பு அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து மயிர்கால்களை வலுப்படுத்தும்.
வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் உள்ள 'சிலிகா' எனும் நுண்சத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும். வாழைப்பழத்தில் இருக்கும் நுண்கிருமிகள் எதிர்ப்பு பண்பு, பாக்டீரியா மற்றும் பூஞ்சை பாதிப்பை நீக்கி பொடுகு பிரச்சினையை தீர்க்கும்.
கூந்தலுக்கு வாழைப்பழ மாஸ்க் பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைவதோடு, தலைமுடியின் பளபளப்பு அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து மயிர்கால்களை வலுப்படுத்தும். இதனால் கூந்தல் நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
வாழைப்பழ மாஸ்க்
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 1
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் அல்லது தேங்காய்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கற்றாழைச்சாறு - தேவைக்கேற்ப
செய்முறை:
வாழைப்பழத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் மசித்த வாழைப்பழம், கெட்டித்தயிர், தேங்காய்ப்பால், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய், கற்றாழைச்சாறு ஆகியவற்றை சேர்த்து மத்து கொண்டு கிரீம் பதத்துக்கு கடைந்து கொள்ளவும். தலைமுடியை சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கவும். தயாரித்து வைத்திருக்கும் வாழைப்பழக் கலவையை பிரஷ் கொண்டு தலைப்பகுதி முழுவதும் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து ரசாயனங்கள் சேர்க்காத ஷாம்பு கொண்டு குளிக்கவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்துவந்தால் பொடுகு பிரச்சினை தீரும். தேங்காய்ப்பால் தலைமுடிக்கு பொலிவையும், மினுமினுப்பையும் தரும். இதை கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம்.
வாழைப்பழம்-கேரட் மாஸ்க்:
கேரட்டில், வைட்டமின்கள் ஏ, பி6, பி1, பி3, பி2, கே மற்றும் சி, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை, தலைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால், முடி உதிர்வு மற்றும் இளநரையைத் தடுக்க முடியும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின், தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். முடி பிளவுபடுவதைத் தடுக்கும்.
வாழைப்பழத்துடன் கேரட், தேன், ஆலிவ் எண்ணெய் சேர்த்து கூழ் பதத்துக்கு நன்றாகக் கலக்கவும். இதை தலையில் முழுவதும் தடவி 30 நிமிடம் கழித்து குளிக்கவும்.
வாழைப்பழம்-முட்டை மாஸ்க்:
முட்டையில் உள்ள புரதம் முடி வளர்ச்சியைத் தூண்டும். வாழைப்பழத்துடன் முட்டையைக் கலந்து தடவினால் கூந்தல் பளபளக்கும்.
உங்கள் கூந்தலின் நீளத்துக்கு ஏற்றவாறு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றுடன் ஒரு முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை சேர்த்து கிரீம் பதத்திற்கு கலந்துகொள்ளுங்கள். இதை கூந்தல் முழுவதும் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.
வாழைப்பழம்-தேன் மாஸ்க்:
தேனில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், வறண்ட தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இதனால் தலையில் உண்டாகும் வறட்சி, எரிச்சல் ஆகிய பிரச்சினைகள் தீரும். பொடுகு பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாகும்.
ஒரு வாழைப்பழத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை தலையில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்.