எடை அதிகரிப்பால் ஏற்படும் கணுக்கால் வலி
|உடல் எடை அதிகரிப்பால் கணுக்கால் நரம்புகள், தசைகள் மற்றும் மூட்டுகள் அழுத்தப்படுவதால் ஏற்படும் வலி மற்றும் வீக்கமே ‘குதிவாதம்’ எனப்படுகிறது.
நவீன காலத்தில் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் எடை அதிகரிப்பால் பல பெண்கள் சிரமப்படுகின்றனர். இதனால் சர்க்கரை நோய், கால் வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதிக உடல் எடையால் ஏற்படும் கணுக்கால் மற்றும் குதிகால் பாதிப்புகளில் குதிவாதம், கீல்வாதம், தசைநாண் அழற்சி ஆகியவை முக்கியமானவை.
உடல் எடை அதிகரிப்பால் கணுக்கால் நரம்புகள், தசைகள் மற்றும் மூட்டுகள் அழுத்தப்படுவதால் ஏற்படும் வலி மற்றும் வீக்கமே 'குதிவாதம்' எனப்படுகிறது.
எலும்பு மற்றும் சதைப் பகுதியை இணைக்கும் திசுக்களில் ஏற்படும் அழுத்தத்தை 'தசைநாண் அழற்சி' என்று கூறுவார்கள். இந்த இரண்டு பாதிப்புகளும் ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது போதுமான ஓய்வு, நீண்ட நேரம் நிற்பதை குறைத்தல், தினமும் மூன்று அல்லது நான்கு முறை 15 நிமிடங்கள் ஐஸ் ஒத்தடம் கொடுத்தல், குதிகால் பகுதியை மேல்நோக்கி வைத்து ஓய்வெடுத்தல் போன்ற நிவாரண வழிகளைப் பின்பற்றலாம் அல்லது பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைக்கலாம். குதிகால் மற்றும் கணுக்கால் பகுதி நீரினுள் இருக்கும் பொழுது பாதத்தின் மேல்பகுதி வெளியே இருப்பது அவசியம்.
'கீல்வாதம்' போன்ற பாதிப்புகள் அழுத்தம் மூலம் மட்டும் இல்லாமல் உணவுப் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளாகும். அதிகமாக மாமிசம் உட்கொள்ளும் பொழுது யூரிக் அமிலம் மிகுதியாக சுரந்து, கால் பகுதியில் படிந்து வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும். இதற்கு மேலே குறிப்பிட்ட தீர்வுகளுடன், உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.
மாமிச உணவுகள் மூலம் யூரிக் அமிலம் அதிகமாக சுரப்பதால், அவற்றைத் தவிர்த்து, தண்ணீர் அதிகமாக குடிப்பதன் மூலமும் இதற்கு தீர்வு காணலாம்.
அதிகமாக நடப்பதையும், நிற்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது நல்லது.
குதிகால் பகுதியில் மிருதுவாக இருக்கும் காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெறும் காலில் நடப்பதை முற்றிலுமாக தவிர்ப்பது சிறந்தது. அதிக எடையால் ஏற்படும் அழுத்தத்தை தாங்கும் விதத்தில் எலும்பு மற்றும் அதை சுற்றிய தசைப் பகுதிகளை வலுவாக்குவதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிடலாம். அறிகுறிகள் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்வதே சிறந்தது.