< Back
உணவு
வால்நட் பர்பி
உணவு

வால்நட் பர்பி

தினத்தந்தி
|
22 Oct 2023 7:00 AM IST

சுவையான வால்நட் பர்பியின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

வால்நட் பர்பி

பருப்பு வகையைச் சேர்ந்த வால்நட், வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து என பல்வேறு சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு இதை ஆரோக்கியமான நொறுக்குத் தீனியாக கொடுக்கலாம். அந்த வகையில் வால்நட் பருப்பைக் கொண்டு சுவையான பர்பி செய்யும் முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வால்நட் பருப்பு - 2 கப்

நெய் - 6 டீஸ்பூன்

வெல்லம் - 2 கப் (பொடித்தது)

சுக்கு பொடி -1 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

வால்நட் பருப்புகளை ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

அகலமான நான்-ஸ்டிக் கடாயில் 2 டீஸ்பூன் நெய்யை ஊற்றவும். அது உருகியதும் வால்நட்டை அதில் போட்டு, பொன்னிறமாக வறுக்கவும். பின்பு அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டு மிதமான தீயில் பாகு தயாரிக்கவும். பின்பு அதனுடன் ஏலக்காய் பொடி, சுக்கு பொடி மற்றும் வறுத்த வால்நட் பருப்புகளை போட்டு கலக்கவும். இப்போது அதில் சிறிது சிறிதாக நெய் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் இந்தக் கலவையைப் போட்டு, சமமாக பரப்பி வைக்கவும். அது சற்றே ஆறிய பின்பு உங்களுக்கு விருப்பமான வடிவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இப்போது ஆரோக்கியமான 'வால்நட் பர்பி' தயார். அதன் மேலே நெய்யில் வறுத்த வெள்ளை எள், மெல்லியதாக நறுக்கிய பாதாம் போன்றவற்றை அலங்காரமாக தூவலாம்.

மூளையை சுறுசுறுப்பாக்கும் வால்நட்

மூளை செயல்திறன் குறைபாடு, அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படுவதற்கு ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் நரம்புகளில் உண்டாகும் அழற்சி ஆகியவை முக்கிய காரணமாகும். 'அமிலாய்டு பீட்டா' புரதம் என்ற மூலக்கூறு, நியூரான்களில் பிரீ ரேடிக்கல்களின் உருவாக்கத்தை அதிகரிக்கும். இது மூளையில் ஆக்சிஜனேற்ற சேதம் மற்றும் செல்களின் இறப்புக்கு வழிவகுக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வால்நட் பருப்பில் ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பல மூலக்கூறுகள் உள்ளன. எனவே வால்நட் பருப்புகளை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொண்டால் மூளையின் செயல்திறனையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க முடியும்.

வால்நட்டில் உள்ள ரசாயன மூலக்கூறுகள், ஆக்சிஜனேற்ற பாதுகாப்பை மேம்படுத்தும். பிரீ ரேடிக்கல்களின் அளவு, புரத ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கும்.

தினமும் வால்நட் சாப்பிடுவதன் மூலம் பார்கின்சன் நோய், பக்கவாதம், மனச்சோர்வு, இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை தடுக்க முடியும்.

மேலும் செய்திகள்