புடலங்காய் வடை
|சுவையான புடலங்காய் வடை, முருங்கைக்காய் வடை ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
புடலங்காய் வடை
தேவையான பொருட்கள்:
புடலங்காய் (பொடிதாக நறுக்கியது) - 1 கப்
கடலைப் பருப்பு - ½ கப்
துவரம் பருப்பு - ½ கப்
காய்ந்த மிளகாய் - 6
இஞ்சி - 1 அங்குல துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
லவங்கப்பட்டை - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் இவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டவும். பின்பு அந்தக் கலவையுடன் சோம்பு, லவங்கப்பட்டை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் புடலங்காய், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு போட்டு கலந்து 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். பின்பு அந்தக் கலவையில் இருந்து பிரிந்து வந்திருக்கும் தண்ணீரை வடிகட்டவும். புடலங்காய் கலவை, பருப்பு விழுது, பொடிதாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு தயார் செய்து வைத்திருக்கும் மாவு கலவையை சிறு சிறு வடைகளாக தட்டி எண் ணெயில் போட்டு சுட்டு எடுக்கவும். தேங்காய் சட்னி மற்றும் புதினா சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
முருங்கைக்காய் வடை
தேவையானப் பொருட்கள்:
முருங்கைக்காய் - 3
கடலைப் பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெரிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1 கப்
இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைக்கவும். அது ஆறிய பின்பு, அதன் உள்ளே இருக்கும் சதைப்பற்றான பகுதியை தனியாக வழித்து எடுக்கவும்.
கடலைப் பருப்பில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டவும். பின்பு அதனுடன் சோம்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பின்பு அந்த மாவுடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு தயார் செய்து வைத்திருக்கும் மாவு கலவையை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு சுட்டு எடுக்கவும். சூடான முருங்கைக்காய் வடை தயார்.