கேழ்வரகு குழிப்பணியாரம் ரெசிபிகள்
|சுவையான கேழ்வரகு மசாலா குழிப்பணியாரம், வல்லாரை கீரை கேழ்வரகு குழிப்பணியாரம் மற்றும் பணியாரத்துக்கு ஏற்ற கார சட்னி ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
கேழ்வரகு மசாலா குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
கேழ்வரகு மாவு - ¼ கப்
சின்ன வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 4
கடுகு - ¼ டீஸ்பூன்
உளுந்து - ½ டீஸ்பூன்
சீரகம் - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
இட்லி மாவு, கேழ்வரகு மாவு இரண்டையும் நன்றாகக் கலக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, சீரகம் ஆகியவற்றை போடவும். அவை நன்றாக பொரிந்ததும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். பின்பு அடுப்பை அணைக்கவும். இந்த கலவை ஆறியதும், மாவில் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறகு குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். அதில் இருக்கும் ஒவ்வொரு குழியிலும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றவும். மாவு வெந்ததும் பணியாரக் கம்பி கொண்டு குழிப்பணியாரத்தை மறுபக்கம் திருப்பி வேகவைக்கவும். அவ்வப்போது தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். இரண்டு பக்கமும் சிவந்து வந்தவுடன் பணியாரத்தை கல்லில் இருந்து எடுக்கவும்.
வல்லாரை கீரை கேழ்வரகு குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
கேழ்வரகு மாவு - ¼ கப்
சின்ன வெங்காயம் (பொடிதாக
நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 4
கடுகு - ¼ டீஸ்பூன்
உளுந்து - ½ டீஸ்பூன்
சீரகம் - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
வல்லாரை கீரை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
'கேழ்வரகு மசாலா குழிப்பணியாரம்' செய்வதற்கு மாவை தயாரித்தது போலவே, இதற்கும் தயார் செய்யவும். பின்பு அதில், நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வல்லாரை கீரையை கொட்டி கலக்கவும். பின்னர் குழிப்பணியாரம் சுட்டு எடுக்கவும்.
பணியாரத்துக்கு ஏற்ற கார சட்னி
தேவையான பொருட்கள்:
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2
தக்காளி (பொடிதாக நறுக்கியது) - 1
பூண்டு - 2 பல்
புளி - கொட்டைப்பாக்கு அளவு
கடுகு - ¼ டீஸ்பூன்
உளுந்து - ½ டீஸ்பூன்
சீரகம் - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு சிவக்க வதக்கவும்.பின்னர் தக்காளியை போட்டு நன்றாக மசியுமாறு வதக்கவும். இந்தக் கலவையை ஆறவைத்து பசை போல அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். இதை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும்.