ஆனியன் ரிங்ஸ்
|மொறுமொறு என்ற சுவையுடன், மீண்டும் சாப்பிடத்தூண்டும் ஆனியன் ரிங்ஸ் உணவு, தயாரிப்பதற்கும் எளிமையானது. விருந்தினர்களுக்கு சில நிமிடங்களில் செய்து கொடுத்து அசத்தலாம். இதன் செய்முறை தொகுப்பு இதோ…
குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் மாலை நேர சிற்றுண்டிகளில் ஒன்று 'ஆனியன் ரிங்ஸ்'. மொறுமொறு என்ற சுவையுடன், மீண்டும் சாப்பிடத்தூண்டும் இந்த உணவு, தயாரிப்பதற்கும் எளிமையானது. விருந்தினர்களுக்கு சில நிமிடங்களில் செய்து கொடுத்து அசத்தலாம். இதன் செய்முறை தொகுப்பு இதோ…
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 5
மைதா மாவு - 200 கிராம்
சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி
ஆரிகனோ (உலர்ந்த
கற்பூரவள்ளி) - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
பூண்டு - 8 பல்
தண்ணீர், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
ரொட்டித் தூள் - 100 கிராம்
'டிப்' தயாரிக்க தேவையான பொருட்கள்:
பிரியாணி இலை - 1
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
ஆரிகனோ (உலர்ந்த
கற்பூரவள்ளி) - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
மயோன்னஸ் - 4 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ஆனியன் ரிங்ஸ் செய்முறை
படத்தில் காட்டியுள்ளதுபோல் வெங்காயத்தை வட்டமாக வெட்டி, தனித்தனி வளையங்களாகப் பிரித்துக்கொள்ளவும். பின்பு அதில் சிறிது மைதா மாவைத் தூவி கிளறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, சில்லி பிளேக்ஸ், ஆரிகனோ, மிளகுத்தூள், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.
பின்பு வெங்காயத் துண்டுகளை ஒவ்வொன்றாக அந்த மாவில் தோய்த்து, ரொட்டித்தூளில் நன்றாக புரட்டி எடுத்து, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
'டிப்' செய்முறை
வாணலியில் வெண்ணெய்யைப் போட்டு உருகியதும், பிரியாணி இலை, சில்லி பிளேக்ஸ், பொடிதாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். பின்னர் அந்தக் கலவையில் மயோன்னஸ், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும். இப்பொழுது 'ஆனியன் மயோன்னஸ் டிப்' தயார்.
மொறுமொறு ஆனியன் ரிங்சுடன், ஆனியன் மயோன்னஸ் டிப் சேர்த்து பரிமாறலாம்.