< Back
உணவு
நவாபி கோப்தா கறி
உணவு

நவாபி கோப்தா கறி

தினத்தந்தி
|
13 Nov 2022 7:00 AM IST

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதில் தக்காளி விழுது சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும். கலவை கொதித்து வரும்போது அதில் பிரெஷ் கிரீம் சேர்க்கவும்.

நவாபி கோப்தா கறி


தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 150 கிராம்

வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 2

துருவிய தேங்காய் - 4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிய துண்டு

கொத்தமல்லித் தழை - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

இனிப்பில்லாத கோவா - 100 கிராம்

பால் - 20 மில்லி

பன்னீர் - 60 கிராம்

குங்குமப்பூ - 1 கிராம்

சோளமாவு - 1 தேக்கரண்டி

மைதா மாவு - 1 மேசைக்கரண்டி

திராட்சை 20 கிராம்

முந்திரி - 20 கிராம்

பாதாம் பருப்பு - 20 கிராம்

தனியா - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 4

ஏலக்காய் - 2

கிராம்பு - 4

பட்டை - 2

எண்ணெய் - தேவைக்கேற்ப

பிரெஷ் கிரீம் - 40 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி அதில் குங்குமப்பூவைக் கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பன்னீர், கோவா, சோள மாவு, மைதா மாவு, திராட்சை, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு இவை எல்லாவற்றையும் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்து, எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மிக்சி ஜாரில் நறுக்கிய வெங்காயம், முந்திரி, பாதாம், தனியா, கசகசா, சீரகம், துருவிய தேங்காய், இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், ஏலக்காய், கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை, 70 மில்லி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதில் தக்காளி விழுது சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றவும். கலவை கொதித்து வரும்போது அதில் பிரெஷ் கிரீம் சேர்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து எண்ணெய் பிரிந்து மேலே வரும் பதத்தில், பொரித்த உருண்டைகளை அதில் போடவும். சிறிது நேரம் கழித்து அதன் மேல் கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும். 'நவாபி கோப்தா கறி' ரெடி. இதை சப்பாத்தி, தோசை, இட்லி அல்லது பரோட்டாவுடன் சேர்த்து பரிமாறலாம்.

_____

சைவ ஆம்லெட்


தேவையான பொருட்கள்:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு,

பாசிப்பருப்பு - தலா 50 கிராம்

உளுந்து, முந்திரி, மக்காச்சோளம் - 50 கிராம்

முழு கோதுமை - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை, மஞ்சள் தூள்,

மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, கொரகொரப்பாக அரைக்கவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நன்றாகக் கரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை,

மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை கரைத்த மாவுடன் கலந்து ஆம்லெட் போல் தோசைக்கல்லில் ஊற்றி, வேக வைத்து எடுத்தால் சுவையான 'சைவ ஆம்லெட்' தயார்.

மேலும் செய்திகள்