< Back
உணவு
விருந்தினர்களை உபசரிக்கும் முறை
உணவு

விருந்தினர்களை உபசரிக்கும் முறை

தினத்தந்தி
|
28 Aug 2022 7:00 AM IST

விருந்தினராக வரும் சுமங்கலி பெண்களுக்கு, வீட்டின் இல்லத்தரசிகள் குங்குமம் அளிக்க வேண்டும் அல்லது அவர்களது குடும்ப, மத வழக்கப்படி முறையாக வரவேற்பு அளிக்கலாம். விருந்தினர்கள் முன்னிலையில் இல்லத்தரசிகள் புன்சிரிப்புடன் இருப்பது பண்பாடாகும்.

வீட்டுக்கு வரும் விருந்தினரை 'தெய்வம்' என்கிறது நமது பாரம்பரியம். உறவுகளுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை அறிந்த நமது முன்னோர்கள், இல்லறத்தார் கடமையில் 'விருந்தோம்பல்' என்ற மரபை முதன்மைப்படுத்தி இருக்கிறார்கள்.

தற்போதைய அவசரம் நிறைந்த காலகட்டத்தில், உறவினர்களின் நேரடி வருகை என்பது பல காரணங்களால் குறைந்து விட்டது. வீட்டுக்கு வரும் விருந்தினர்களை எப்படி வரவேற்பது என்பதை அறியாத நிலையில்தான் இன்றைய இளம் தலைமுறையினரில் பலர் உள்ளனர்.

வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது இளம் வயதினருக்கு அனைத்து தரப்பு உறவினர்களையும் வரவேற்று, நலம் விசாரிக்க சொல்லித்தர வேண்டும்.

'விருந்தினர்' அடிக்கடி வரக்கூடிய வாய்ப்பில்லை என்பதால், அவரை உபசரித்து, வந்த விஷயத்தை அறிந்த பின்பு, அவரவர் கால நேரத்துக்கு ஏற்ப மன நிறைவுடன் திரும்பி செல்லும்படி செய்ய வேண்டும்.

வீட்டுக்கு வருபவர் எவ்வித நோக்கத்துடன் வந்தாலும், அவருக்கு முதலில் குடிக்க தண்ணீர் தருதல் வேண்டும். அதனால், கோபத்துடன் அவர் வந்திருந்தாலும், தண்ணீரை வாங்கினாலோ அல்லது பருகினாலோ அவரது மனம் ஆசுவாசம் அடையும்.

உறவினர் வந்து அமர்ந்திருக்கும் நிலையில், வீட்டில் இருப்போர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தவாறோ, கணினி அல்லது செல்போனில் மூழ்கியவாறோ இருப்பது கூடாது. இயன்றவரை விருந்தினர் வருகையின் நோக்கத்தை அறிந்து கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும்.

விருந்தினரை வீட்டில் சாப்பிடும்படி கூறுவது நல்ல பண்பாகும். அவர் சம்மதிக்கும் நிலையில், வீட்டில் உள்ள பெண்மணிகளே நேரடியாக பரிமாறுவது நல்லது. வீட்டுக்கு வரும் விருந்தினரை மகிழ்ச்சி அடையச் செய்வதுதான் தமிழ் மண்ணின் மரபாகும்.

பரஸ்பர நலம் விசாரிப்புகள் முடிந்த பின்னர், உறவினர் வீட்டுக்கு வந்த காரணத்தை நாசூக்காக விசாரிக்க வேண்டும். ஏதாவது சிக்கலில் அவர் இருப்பதாக அறிய வந்தால், விஷயத்தை முழுவதுமாக சொல்ல விடுங்கள். அதன் பின்னர் உங்களால் இயன்றதை செய்யலாம் அல்லது இயலாது என்பதை பொறுமையாக தெரிவித்து விடலாம்.

விருந்தினராக வரும் சுமங்கலி பெண்களுக்கு, வீட்டின் இல்லத்தரசிகள் குங்குமம் அளிக்க வேண்டும் அல்லது அவர்களது குடும்ப, மத வழக்கப்படி முறையாக வரவேற்பு அளிக்கலாம். விருந்தினர்கள் முன்னிலையில் இல்லத்தரசிகள் புன்சிரிப்புடன் இருப்பது பண்பாடாகும்.

வயது முதிர்ந்தோர் வீட்டுக்கு வந்தால், அவர்களிடம் வீட்டில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் ஆசிகளை பெறும்படி செய்ய வேண்டும். அவர்கள் இருக்கையில் அமர்ந்த பின்னரே, பிள்ளைகள் அமரும்படியும் சொல்லித் தர வேண்டும்.

விருந்தினர் வருகை என்பது முன்னதாகவே தெரிய வரும் நிலையில், அவர்கள் எப்போது வருகிறார்கள் என்பதை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்வது நல்லது. அதனால், பல சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

மேலும் செய்திகள்