கோவைக்காய் பக்கோடா
|சுவையான கோவைக்காய் பக்கோடா மற்றும் கோவைக்காய் ஊறுகாய் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
கோவைக்காய் பக்கோடா
தேவையான பொருட்கள்:
கோவைக்காய் - 500 கிராம்
வெங்காயம் - 1
சோம்பு - ¼ தேக்கரண்டி
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கோவைக்காய்களை நன்றாக சுத்தம் செய்து, நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதேபோல் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கோவைக்காய், வெங்காயம், சோம்பு, கடலை மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், குழம்பு மிளகாய்த்தூள், பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றாமல் கலக்கவும். பின்பு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கோவைக்காய் கலவையை உதிர்த்துப்போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். பின்னர் கறிவேப்பிலையை அதே எண்ணெய்யில் பொரித்து பக்கோடா மீது தூவவும். இப்பொழுது சுவையான 'கோவைக்காய் பக்கோடா' தயார்.
கோவைக்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
கோவைக்காய் - 500 கிராம்
கடுகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
காய்ந்த மிளகாய் - 50 கிராம்
பெருங்காயத்தூள் - ½ தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் கலந்து ஊறவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், சீரகம், கடுகு ஆகியவற்றை தனித்தனியாக மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் அவற்றுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய கோவைக்காய்களை போட்டு நன்றாக வதக்கியபின் இறக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் பெருங்காயத்தூள் மற்றும் வதக்கிய கோவைக்காய்களை சேர்த்துக் கிளறவும். அதன் பிறகு ஊற வைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றவும் (புளிக்கு மாற்றாக எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்க்கலாம்). 10 முதல் 15 நிமிடங்கள் வாணலியை மூடி வைத்து மிதமான தீயில் கோவைக்காய்களை வேக வைக்கவும். இந்தக் கலவை ஊறுகாய் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்போது 'கோவைக்காய் ஊறுகாய்' தயார். இது ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு பயன்படுத்தவும்.