ருசியான சட்னி வகைகள்
|மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி, குடை மிளகாய் சட்னி எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
புதினா - 10 இலை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 சிறிய துண்டு
தேங்காய் துருவல் - ½ கப்
பொட்டுக்கடலை - ¼ கப்
வறுத்த வேர்க்கடலை - ¼ கப் (மேல்தோல் நீக்கியது)
உப்பு - தேவையான அளவு
புளி - ஒரு கொட்டைப் பாக்கு அளவு
தாளிக்க:
கடுகு - ½ டீஸ்பூன்
உளுந்து - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, புதினா, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கியதும் அடுப்பை அணைக்கவும்.
இந்தக் கலவையை நன்றாக ஆற வைக்கவும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, உப்பு, புளி மற்றும் வதக்கிய கலவையை சேர்த்து அரைக்கவும்.
இந்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும்.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் இதை சட்னி கலவையில் கொட்டிக் கலக்கவும்.
இப்போது சுவையான 'தண்ணி சட்னி' ரெடி.
குடைமிளகாய் சட்னி
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் - 1 (பெரியது)
வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1 சிறிய துண்டு
தக்காளி - 1
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 5 (காரத்திற்கு ஏற்ப)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு - ½ டீஸ்பூன்
உளுந்து - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை தனித்தனியாக பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் உளுந்து, கடலைப் பருப்பு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு பூண்டு, இஞ்சி, வெங்காயம் போன்றவற்றை சேர்த்து மீண்டும் வதக்கவும். அவை நன்றாக வதங்கிய பின்பு அதில் தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும். இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கிளறியதும் அடுப்பை அணைக்கவும்.இந்தக் கலவை நன்றாக ஆறியதும், அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பசை போல அரைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். இதை சட்னி கலவையில் கொட்டிக் கிளறினால் 'குடைமிளகாய் சட்னி' ரெடி.