< Back
உணவு
சீஸ் முறுக்கு சாண்ட்விச்
உணவு

சீஸ் முறுக்கு சாண்ட்விச்

தினத்தந்தி
|
19 Feb 2023 7:00 AM IST

சீஸ் முறுக்கு சாண்ட்விச் மற்றும் முறுக்கு சாலட் ஆகிய ரெசிபிகளின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

சீஸ் முறுக்கு சாண்ட்விச்

தேவையான பொருட்கள்:

முறுக்கு - தேவையான அளவு

வெங்காயம் - 1

வெள்ளரிக்காய் - 1

தக்காளி - 1

ஓமப்பொடி - 1 கப்

சீஸ் துருவல் - 1 கப்

சட்னி தயாரிக்க:

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிய துண்டு

பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சட்னி தயாரிக்க:

ஒரு மிக்சி ஜாரில் புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, பொட்டுக்கடலை, உப்பு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். இந்த சட்னியைத் தனியாக எடுத்து வைக்கவும்.

சாண்ட்விச் தயாரிக்க:

வட்டமாகவும், தட்டையாகவும் உள்ள முறுக்கைத் தேர்ந்தெடுக்கவும். வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை முறுக்கின் அளவிற்கு ஏற்ப வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

முறுக்கின் மேல், முதலில் சட்னியை சிறிதளவு தடவவும். பின்பு வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் ஓமப்பொடி ஆகியவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கவும்.

இந்த அடுக்கின் மீது சிறிதளவு சட்னியை வைத்து மற்றொரு முறுக்கைக் கொண்டு மூடவும். பிறகு அதன் மேற்பகுதியில் சீஸ் துருவலை தாராளமாகத் தூவவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த, 'சீஸ் முறுக்கு சாண்ட்விச்' தயார்.

முறுக்கு சாலட்

தேவையான பொருட்கள்:

முறுக்கு - தேவையான அளவு

கேரட் - 1

பீட்ரூட் - 1

வெங்காயம் - 1

எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - 1 கட்டு

தேங்காய் - 1 துண்டு

பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும். அவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். இந்த கலவையை அரை மணி நேரத்துக்கு அப்படியே மூடி வைக்கவும்.

ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை, உப்பு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முறுக்கை பொடியாக நொறுக்கிப் போடவும். அதனுடன் 2 தேக்கரண்டி சாலட் கலவை, 1 தேக்கரண்டி சட்னி சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான 'முறுக்கு சாலட்' ரெடி.

மேலும் செய்திகள்