கேரமல் சாக்லெட் பார்
|குழந்தைகள் விரும்பி சுவைக்கும் கேரமல் சாக்லெட் பார் தயார் செய்யும் விதம் குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை - 200 கிராம்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் (உப்பு இல்லாதது)
பிரஷ் கிரீம் - ½ கப்
உப்பு - 1 சிட்டிகை
மில்க் சாக்லெட் - 400 கிராம்
கார்ன் சிரப் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
(குறிப்பு - கரண்டிக்கு பதிலாக சிலிக்கான் ஸ்பாட்சுலாவை மட்டுமே பயன்படுத்தவும்).
அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் சர்க்கரையைக் கொட்டி மிதமான தீயில் தொடர்ந்து கிளறவும். சிறிது நேரத்தில் சர்க்கரை உருகி கேரமலாக மாற ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அதனுடன் வெண்ணெய்யை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்பு அதில் பிரஷ் கிரீம் மற்றும் அரை சிட்டிகை உப்பு கலந்து தனியாக வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும். மற்றொரு சிறிய பாத்திரத்தில் 250 கிராம் மில்க் சாக்லெட்டை போட்டு, அதை தண்ணீர் இருக்கும் பாத்திரத்தின் உள்ளே வைக்கவும். தண்ணீரின் வெப்பத்தால் சாக்லெட் உருக ஆரம்பிக்கும். இதை 'டபுள் பாயிலிங் முறை' என்று குறிப்பிடுவார்கள். சாக்லெட் முழுவதுமாக உருகியதும், அதனுடன் கார்ன் சிரப் சேர்த்து கலக்கவும். பின்னர் இந்தக் கலவையை இரண்டு பங்காக பிரித்துக்கொள்ளவும்.
ஒரு செவ்வக வடிவப் பாத்திரத்தின் உள்ளே பட்டர் பேப்பரை வைக்கவும். அதன் மீது உருக்கி வைத்துள்ள ஒரு பங்கு மில்க் சாக்லெட்டை பரவலாக ஊற்றவும். அதற்கு மேல் கேரமல்லை ஊற்றி தடவவும். பின்பு மீண்டும் அதன் மேல் மற்றொரு பங்கு மில்க் சாக்லெட்டை ஊற்றி பரப்பி விடவும்.
இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். சாக்லெட் சற்று கெட்டியாகி இருக்கும். அதை 1½ அங்குல அகலம் கொண்ட துண்டுகளாக வெட்டி எடுத்து, 30 நிமிடங்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
மீதம் இருக்கும் 150 கிராம் மில்க் சாக்லெட்டை மீண்டும் டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இருக்கும் சாக்லெட் துண்டுகளை வெளியே எடுக்கவும். அவற்றை ஒவ்வொன்றாக உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து, பட்டர் பேப்பரில் வரிசையாக அடுக்கி வைக்கவும். பின்பு மீண்டும் அதை குளிர்சாதனப் பெட்டியில் ஒரு மணி நேரம் வரை வைத்து எடுக்கவும்.
இப்போது கேரமல் நிறைந்த சுவையான சாக்லெட்டுகள் தயார். இதன் மீது தங்க நிற ஜரிகை காகிதம் ஒட்டி, நண்பர்களுக்குப் பரிசாக அளிக்கலாம்.