< Back
உணவு
கற்பூரவல்லி பஜ்ஜி
உணவு

கற்பூரவல்லி பஜ்ஜி

தினத்தந்தி
|
18 Jun 2023 7:00 AM IST

சுவையான கற்பூரவல்லி பஜ்ஜி, கற்பூரவல்லி சட்னி ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

ற்பூரவல்லி பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலைகள் - தேவைக்கேற்ப

கடலை மாவு - 200 கிராம்

அரிசி மாவு - 50 கிராம்

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - தேக்கரண்டி

சமையல் சோடா - தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கற்பூரவல்லி இலைகளை நன்றாக சுத்தப்படுத்தவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சீரகம், பெருங்காயம், மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து கலக்கவும். பின்பு அதில் சமையல் சோடா மற்றும் தேவையான அளவு தண்ணீர் கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கற்பூரவல்லி இலைகளை ஒவ்வொன்றாக பஜ்ஜி மாவில் இரண்டுமுறை தோய்த்து எண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

கற்பூரவல்லி சட்னி

தேவையான பொருட்கள்:

கற்பூரவல்லி இலைகள் - 4 கைப்பிடி அளவு

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

உளுந்து - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

தேங்காய் - மூடி (துருவியது)

கடுகு - 1 தேக்கரண்டி

மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கற்பூரவல்லி இலைகளை நன்றாக சுத்தப்படுத்தவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு கற்பூரவல்லி இலைகளை அதில் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கவும். பின்னர் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். கலவை ஆறியதும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்பு அதில் கற்பூரவல்லி விழுதை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைக்கவும். சுவையான 'கற்பூரவல்லி சட்னி' தயார்.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற மூலிகைத் தாவரம் கற்பூரவல்லி. காலையில் எழுந்ததும் காலை உணவு சாப்பிடுவதற்கு முன்பு, கற்பூரவல்லி இலையை சுத்தப்படுத்தி வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டால் சளி, இருமல், தொண்டையில் நோய்த்தொற்று போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். குழந்தைகளுக்கு கற்பூரவல்லி இலைச் சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் நெஞ்சுசளி, இருமல் நீங்கும். கற்பூரவல்லி இலைகளை கசக்கி, அதன் சாற்றை சருமத்தில் பூசி வந்தால் அரிப்பு, சொறி போன்ற சரும பிரச்சினைகள் விரைவில் குணமாகும். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் கற்பூரவல்லி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், அவர்களின் தொண்டைப்பகுதியில் தங்கி இருக்கும் கிருமிகள் அழியும்.

மேலும் செய்திகள்