< Back
உணவு
பட்ஜெட்டை பாதிக்காத சமையல் முறைகள்
உணவு

பட்ஜெட்டை பாதிக்காத சமையல் முறைகள்

தினத்தந்தி
|
24 July 2022 7:00 AM IST

குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் தனித்தனியாக சாப்பிடாமல் சேர்ந்து சாப்பிடலாம். இதனால் ஒவ்வொரு முறையும் குழம்பு, பொரியல் போன்றவற்றை சூடுபடுத்தும் வேலை குறையும். சமையல் எரிவாயு மிச்சமாகும்.

பொருளாதார பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை, குடும்பத்தின் பட்ஜெட்டையும், சேமிப்பையும் பாதிக்கக்கூடும். இதில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு தான் குடும்பத் தலைவிகளுக்கு பிரச்சினையாக இருப்பதுண்டு.

பணத்தை திட்டமிட்டு கையாள்வது, வருமானத்தை அதிகரிப்பது என்று பல வழிகளை முயற்சித்தாலும், மற்றொரு பக்கம் சமையல் முறைகளில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதையும் யோசிப்பது நல்லது. அதேசமயத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் சமைக்க வேண்டும். அதுபற்றிய குறிப்புகள் இங்கே:

 மூன்று வேளையும் வெவ்வேறு வகையான உணவுகள் தயார் செய்வதைத் தவிர்க்கலாம். உதாரணத்துக்கு காலையில் தயாரித்த சாம்பாரை இரவு உணவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மதிய உணவுக்கு தயாரித்த காய்கறி குழம்பை இரவு சப்பாத்திக்கு உபயோகிக்கலாம்.

 மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா என்று எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கும்போதே கொண்டைக்கடலை, காராமணி, பட்டாணி போன்றவற்றையும் வாங்கினால், அவற்றில் சுண்டல் தயாரித்து சாப்பிடலாம். இதன் மூலம் செலவை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.

 குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நேரத்தில் தனித்தனியாக சாப்பிடாமல் சேர்ந்து சாப்பிடலாம். இதனால் ஒவ்வொரு முறையும் குழம்பு, பொரியல் போன்றவற்றை சூடுபடுத்தும் வேலை குறையும். சமையல் எரிவாயு மிச்சமாகும்.

 நாகரிகம் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல், நமக்கு அருகிலேயே கிடைக்கும் காய்கறிகளை சமைக்கலாம். அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 ஒவ்வொரு நாளும் என்ன சமைக்கப் போகிறீர்கள் என்ற பட்டியலை, முன்னதாகவே ஒரு வார காலத்துக்கு தயார் செய்துகொள்வது நல்லது. இதன் மூலம் கடைசி நேரத்தில் திட்டமிடாமல் சமைத்து, உணவையும், உணவுப் பொருட் களையும் வீணடிப்பதை தவிர்க்கலாம்.

 ஒவ்வொருவர் விருப்பத்துக்கு ஏற்ற வகையில், ஒரே நேரத்தில் பலவித உணவுகளை சமைப்பதற்கு பதிலாக, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்ற ஒரு சமையலை மட்டுமே செய்வது நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும்.

 வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் அதிக பணத்தை சேமிக்கலாம்.

 ஆரோக்கியமான, அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை சமைப்பதற்கு, எல்லா வகையான சமையல் பொருட்களையும் வாங்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையானப் பொருட்களை வாங்குவதற்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். மூலிகை தேநீர், பேக் செய்யப்பட்ட ஆரோக்கியமானப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதை இரண்டாம் நிலைத் தேர்வாக வைத்திருங்கள்.

 உணவை வீணாக்காமல் தேவையான அளவு மட்டும் சமைப்பது அல்லது மீதமான உணவுகளை முறையாக பயன்படுத்துவது பணத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும் சிறந்த வழியாகும்.

மேலும் செய்திகள்