< Back
உணவு
வாழை இலை அல்வா
உணவு

வாழை இலை அல்வா

தினத்தந்தி
|
12 March 2023 7:00 AM IST

சுவையான வாழை இலை அல்வா மற்றும் வாழை இலை சட்னி ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

வாழை இலை அல்வா

தேவையான பொருட்கள்:

வாழை இலை - 2

சோள மாவு - ¼ கப்

சர்க்கரை - ¼ கப்

முந்திரி - 10

பூசணி விதை - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

நெய் - 6 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

இளசாகவோ, முற்றியதாகவோ இல்லாமல் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி விழுதாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாகப் போட்டு, நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், வாழை இலை விழுதைக் கொட்டி அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைக்கவும். வாழை இலை விழுது வதங்கி கெட்டியானதும், அதனுடன் சோள மாவு கரைசலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கிளறவும். இப்போது அதில் சிறிது சிறிதாக நெய்யை ஊற்றிக் கிளறி, கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்த அல்வாவை நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, பூசணி விதையை மேலே தூவி அலங்கரிக்கவும்.

வாழை இலை சட்னி

தேவையான பொருட்கள்:

வாழை இலை - ½ இலை

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1¼ டேபிள் ஸ்பூன்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பூண்டு - 10 பல்

காய்ந்த மிளகாய் - 6

சாம்பார் வெங்காயம் - 10

புளி - கொட்டைப் பாக்கு அளவு

கடுகு - ¼ டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயம் - 2 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2½ டேபிள் ஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுக்கவும். பின்பு பூண்டு, சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி, சாம்பார் வெங்காயம், புளி போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.

சிறிது நேரம் கழித்து அதனுடன் பொடிதாக நறுக்கிய இளம் வாழை இலையைக் கொட்டி நன்றாக வதக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி ஆற வைக்கவும்.

கலவை ஆறியதும் அதை மிக்சியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பசை போல அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் கடுகு, ¼ டீஸ்பூன் உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். இதை அரைத்த விழுதுடன் கலந்தால் 'வாழை இலை சட்னி' தயார்.

மேலும் செய்திகள்