அரேபிய ஸ்பெஷல் முதபல்
|சுவையான அரேபிய ஸ்பெஷல் முதபல், பீட்ரூட் டிப் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
அரேபிய ஸ்பெஷல் முதபல்
'முதபல்' என்பது கத்தரிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் 'டிப்' வகை உணவாகும். இதை தயாரிப்பதற்கு வெள்ளை எள் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்த 'தஹினி' என்ற விழுது முக்கியமானது. 2 பங்கு வெள்ளை எள்ளுடன், 1 பங்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து மென்மையாக பசை போல அரைத்தால் 'தஹினி' தயார்.
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் (பெரியது) - 2
கறுப்பு எள் - ½ டீஸ்பூன்
தஹினி விழுது - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)
கெட்டி தயிர் - 2 டீஸ்பூன்
மாதுளம் பழ முத்துக்கள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
கத்தரிக்காயைக் கழுவி ஈரமில்லாமல் துடைக்கவும். பின்னர் அதன் மேல் பகுதியில் லேசாகக் கீறி, அடுப்பில் நேரடியாக சுட்டு எடுக்கவும். கருகிய மேல் தோலை நீக்கிவிட்டு சதைப் பகுதியை நன்றாக மசித்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் தஹினி விழுது, எலுமிச்சம் பழச்சாறு, பூண்டு, கெட்டி தயிர், உப்பு, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து மென்மையான பசைபோல கலக்கவும்.
பின்னர் அதன் மேல் கறுப்பு எள் மற்றும் சில மாதுளம்பழ முத்துக்களை கொண்டு அலங்கரிக்கவும். இதை ரொட்டி, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
பீட்ரூட் டிப்
தேவையான பொருட்கள்:
பூண்டு - 2 பல் (பொடிதாக நறுக்கியது)
காய்ந்த புதினா இலைகள் - 1½ டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்
பீட்ரூட் - 1 கப் (துருவியது)
கெட்டி தயிர் - 2 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
ஒரு அகன்ற கிண்ணத்தில் பூண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த புதினா இலைகள், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், பீட்ரூட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். இதை 5 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்கவும். பின்னர் இந்தக் கலவையுடன் கெட்டி தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து, அதன் மேலே ஆலிவ் எண்ணெய் மற்றும் காய்ந்த புதினா இலைகள் தூவி பரிமாறவும்.