உலக மனநல தினம்
|மன நலனை மேம்படுத்தும் செயல்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி ‘உலக மனநல தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை உள்ளடக்கியதே மனநலம். இது நமது சிந்தனை, உணர்வுகள், செயல்பாடு போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைப் பருவம் தொடங்கி முதுமை வரை வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மனநலம் முக்கியமானது.
உலக அளவில் ஏறக்குறைய 100 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். ஆனால் இதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் 30 சதவிகிதத்திற்கும் குறைவே. பொருளாதாரம், உறவு, வறுமை, ஏமாற்றம், இயற்கை பேரழிவு, விபத்து, தீய பழக்கங்களுக்கு அடிமையாதல், உடல்நலக் குறைபாடு போன்ற வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனநலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது குறித்து, உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மன நலனை மேம்படுத்தும் செயல்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10-ந் தேதி 'உலக மனநல தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
மனம் விட்டு பேசுதல், தனக்கென நேரம் ஒதுக்குதல், மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுதல், இயற்கையோடு இணைந்திருத்தல் போன்றவை மனநலத்தை மேம்படுத்தும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தன்னலமில்லா அன்பும், ஆதரவும், சகிப்புத்தன்மையும் மனநலம் பாதித்தவர்களை எளிதாக மீட்டு இயல்பு வாழ்வுக்கு திரும்பச் செய்யும்.