பொக்கிஷமான கடிதங்கள்
|ஊரில் நடக்கும் நிகழ்வுகள், தோழியின் திருமண அழைப்பு, பாட்டியின் கைமணத்தின் ரகசியம், திரைப்பட விமர்சனப் பகிர்வு, வீட்டில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் என ‘அன்புள்ள’ என்று ஆரம்பிக்கும் பல கடிதங்கள், இன்றும் நம் பாட்டி மற்றும் அம்மாவின் பொக்கிஷப் பெட்டியில் ஒளிந்திருக்கும்.
இன்றைய கணினி தலைமுறைக்கு, கடிதம் எழுதுவது மிகவும் புதிதான ஒன்று. கடிதம் எழுதுதல், மனதுக்குப் பிடித்த சம்பவங்களை என்றென்றும் நினைவில் வைத்திருக்க உதவும். இன்றைய இளசுகள் பயன்படுத்தும் மின்னஞ்சலைவிட, கடிதம் எழுதுவது அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும். கடிதத் தொடர்பின் தொடக்கப் புள்ளியாக இந்தியா இருந்தது என்ற வரலாறும் சொல்லப்படுகிறது.
ஊரில் நடக்கும் நிகழ்வுகள், தோழியின் திருமண அழைப்பு, பாட்டியின் கைமணத்தின் ரகசியம், திரைப்பட விமர்சனப் பகிர்வு, வீட்டில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் என 'அன்புள்ள' என்று ஆரம்பிக்கும் பல கடிதங்கள், இன்றும் நம் பாட்டி மற்றும் அம்மாவின் பொக்கிஷப் பெட்டியில் ஒளிந்திருக்கும். இப்படியான நினைவுகளைத் தன்னகத்தே தேக்கி வைத்திருக்கும் கடிதம் எழுதும் கலையையும், கடிதத்தால் நமக்குக் கிடைக்கும் நினைவுகளையும், கையால் எழுதும் முறையையும் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி 'உலக கடித தினம்' கொண்டாடப்படுகிறது.
'அன்புள்ள..', 'நலம் நலமறிய ஆவல்!', 'யாவரும் நலமா?', 'மகிழ்ச்சி' என அனைத்து உணர்வுகளையும் 'எமோஜி' எனப்படும் பொம்மை உருவங்களாக இன்று பயன்படுத்தி வருகிறோம். எனினும், மனிதனின் எண்ண ஓட்டத்தை, உணர்வுகளைத் தகவல் பரிமாறிக்கொள்ளும் வழியாக என்றும் கடிதங்கள் திகழ்கின்றன. இன்றைய டிஜிட்டல் உலகில் வாழும் நாம் அனைவரும், வாழ்வில் ஒரு முறையாவது கடிதம் எழுதுவதன் அனுபவத்தை பெற வேண்டும்.