< Back
மற்றவை
கிச்சன் சிங்க் பளிச்சிட சில டிப்ஸ்
மற்றவை

கிச்சன் சிங்க் 'பளிச்'சிட சில டிப்ஸ்

தினத்தந்தி
|
18 Jun 2023 7:00 AM IST

சமையல் அறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியான சிங்க் பகுதியை சுத்தமாக பராமரித்தால் துர்நாற்றத்தையும், நோய்க்கிருமிகளின் தொற்றையும் தடுக்க முடியும்.

மையல் அறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியான சிங்க் பகுதியை சுத்தமாக பராமரித்தால் துர்நாற்றத்தையும், நோய்க்கிருமிகளின் தொற்றையும் தடுக்க முடியும். அதற்கான ஆலோசனைகள் இதோ…

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க்:

இந்த வகை சிங்க்குகளில் கறை மற்றும் துருப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. இருந்தாலும், அதில் நாம் கொட்டும் உணவுக் கழிவுகள் அதன் ஆயுளைக் குறைக்கக்கூடும். அமிலத்தன்மை நிறைந்த உணவுத் துணுக்குகளை அப்புறப்படுத்தாமல் சிங்க்கில் அதிக நேரம் விட்டுவைத்தால் ஸ்டீலின் தன்மை பாதிக்கப்படும்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க்கை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். சிங்க்கில் இருந்து தண்ணீர் வெளியேறாதவாறு அதன் ஜல்லடைப் பகுதியை முதலில் அடைக்கவும். பின்னர் சிறிதளவு பேக்கிங் சோடா, பாத்திரம் தேய்க்கும் திரவம் ஆகியவற்றை அதில் போட்டு கொதிக்கும் தண்ணீரை ஊற்றவும். 10 நிமிடங்கள் கழித்து, மென்மையான ஸ்கிரப்பர் கொண்டு சிங்க்கை நன்றாகத் தேய்த்து சுத்தப்படுத்தவும். அதன்பின்பு உலர்ந்த மைக்ரோபைபர் துணியைக்கொண்டு அதை நன்றாகத் துடைத்து உலர்த்த வேண்டும்.

வெள்ளை சிங்க்:

வெள்ளை சிங்க் பொருத்தப்பட்ட சமையல் அறை பார்க்க அழகாக இருக்கும். ஆனால் காபி, மசாலா போன்ற கறைகள் படிந்தால் அதன் அழகு எளிதில் பாதிப்படையும். இந்த வகையான சிங்க்கை சுத்தம் செய்யும் முன்பு பருத்தித் துணியை தண்ணீரில் நனைத்து சிங்க்கின் உள்பகுதியில் போட வேண்டும். பின்னர் அதை முழுவதுமாக மூடியவாறு பேக்கிங் சோடாவைத் தூவ வேண்டும். பின்பு அதில் சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்சைடு தெளிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சிங்க்கை ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்து, சுத்தம் செய்ய வேண்டும். பின்பு தண்ணீர் ஊற்றி முழுவதுமாக சுத்தம் செய்து உலர்ந்த துணியால் நன்றாக துடைக்க வேண்டும்.

பீங்கான் சிங்க்:

வெள்ளை சிங்க்கை போலவே இதையும் சுத்தம் செய்ய முடியும். இதில் துருவும், கறையும் எளிதில் படிய வாய்ப்புள்ளது. எலுமிச்சை சாறு மற்றும் உப்பைக் கலந்து பீங்கான் சிங்க்கில் தெளித்து ஸ்கிரப்பரால் தேய்த்தால் கறை அகலும். தினமும் பாத்திரம் துலக்கிய பின்பு வெதுவெதுப்பான சோப்பு நீரில் சிங்க்கை சுத்தம் செய்து மைக்ரோபைபர் துணியால் துடைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்