நாம் மறந்த தேவதை
|நம் எல்லோருடைய வாழ்விலும் முக்கியப் பங்கு வகித்த ஒரு தியாகப் பாத்திரத்தை எத்தனை பேர் நினைவு கொள்கிறோம்?
பிறக்கிறோம்; வளர்கிறோம்; ஆளாகிறோம். நம்முடைய வளர்ச்சிக்குக் காரணம் தாய், தந்தை, ஆசிரியர் என்கிறோம்; உறவிலோ, நட்பிலோ நம்மை ஊக்குவித்தவர்களை ஞாபகம் கொண்டு, சந்தர்ப்பம் கிடைத்தால் புகழ்கிறோம். அல்லது நன்றி தெரிவிக்கிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்டபோது சிகிச்சை அளித்து மறுவாழ்வு தந்த மருத்துவர்களையும் நினைவில் வைக்கிறோம்.
ஆனால், நம் எல்லோருடைய வாழ்விலும் முக்கியப் பங்கு வகித்த ஒரு தியாகப் பாத்திரத்தை எத்தனை பேர் நினைவு கொள்கிறோம்?
அம்மா, நான் சுகப்பிரசவத்தில் பிறந்தேனா; சிசேரியனா? முதல் நாட்களில் என்னென்ன கஷ்டங்களை ஏற்படுத்தினேன்? முதல் சில நாட்களுக்கு குழந்தைங்க எல்லாம் சும்மா சும்மா பால் குடிச்சிட்டுத் தூங்கிட்டே இருக்குமாமே? அடிக்கடி ஈரம் பண்ணிட்டு அழுதுகிட்டே இருக்குமாமே! டயப்பர் எல்லாம் இப்போ தானேம்மா வந்திருக்கு? அந்தக் காலத்தில் என்ன பண்ணினீங்க? காடாத் துணியை முக்கோணமா கிழிச்சு இடுப்பைச் சுத்தி கட்டி வச்சு, அரை மணி நேரத்துக்கு ஒரு தரம் மாத்தற மாதிரி ஆகுமாமே!
இதை எல்லாம் நீ தனியா செஞ்சிருக்க முடியாதே அம்மா! அப்போ உனக்குத் துணையா இருந்து அதெல்லாம் செஞ்சது யாரும்மா? என்று கேட்டிருக்
கிறோமா?
ஆம்! பேறுகால நாட்களில் பிள்ளைத்தாய்ச்சி கரு சுமந்திருந்த களைப்பும், புதிய ஜீவனைப் பாலூட்டி பலப்படுத்த வேண்டிய பொறுப்புமாக, மனம் உந்
தினாலும் உடல் ஒத்துழைக்காத கஷ்டத்தில் இருக்கும் போது, வீட்டில் மற்றவர்களுக்கு ஒருவித உணவும், பிள்ளைத் தாய்ச்சிக்கான சிறப்பு உணவுமாக சமையல் செய்து, இரவு பகல் என்று பாராது குழந்தை இடுப்புத் துணியை ஈரமாக்கி விட்டு அழும் போதெல்லாம் எழுந்து அதை மாற்றி துடைத்து விட்டு, பால் குடிக்க ஏதுவாக தாயின் அருகில் எடுத்துக் கொடுத்து (முதல் குழந்தை பிறக்கும் போது பல இளம் தாய்களுக்கு குழந்தைக்கு எப்படி பாலூட்டுவது என்பது கூடத் தெரியாது), தாயையும், சேயையும் குளிப்பாட்டி, அவர்களின் துணிகளைத் துவைத்து, அந்த சமயங்களில் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகின்ற ஹார்மோனல் இம்பேலன்ஸின் காரணமாக, அவர்கள் காட்டும் கோப எரிச்சல்களையும் பக்குவமாக சகித்து, பொறுமையாக எதிர்கொண்டு, தாய்க்கு மார்பில் பால் கட்டிக் கொண்டால் சரி செய்வதற்கு உதவி செய்து.... அப்பப்பா!
எல்லா வீடுகளிலும், இந்த ஒரு தேவதை பாத்திரத்தினை யாரோ ஏற்றுக்கொண்டு செய்திருக்க வேண்டுமே. பலருடைய வாழ்க்கையில், அம்மாவைப் பெற்ற தாயோ, சிலருடைய வாழ்க்கையில் அப்பாவைப் பெற்ற தாயோ, அத்தையோ, சித்தியோ, பெரியம்மாவோ, அம்மாவுடைய தோழியோ, மிகச் சிலருடைய வாழ்க்கையில் குழந்தையின் அப்பாவோ நமக்கு உதவ வந்த தேவதையாக தம்முடைய பங்களிப்பைச் செய்திருப்பார்கள்.
ஏனோ எவருடைய வீட்டிலும் குழந்தை வளர்ந்த பிறகு அவனிடம் இந்த ஓர் அமைதியான தியாகியைப் பற்றி மட்டும் அடையாளம் காட்டி நன்றி பாராட்டுவதே இல்லை.
அன்னையர் தினம், தந்தையர் தினம், நட்பு தினம் என்று ஏதேதோ கொண்டாடுகிறோம். 'செவிலித்தாய் தினம்' ஏற்படுத்தி நன்றி பாராட்ட வேண்டாமா?