< Back
சாதனையாளர்
சாதனையாளர்

பெண்கள் தொழில் தொடங்க உதவும் மகாலட்சுமி

தினத்தந்தி
|
6 Jun 2022 11:00 AM IST

திருமணத்திற்குப் பிறகு எனது கணவர்தான் உனக்கு நிறைய திறமைகள் உள்ளது. அதனால், நீ ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டுமென்று என்னை ஊக்கப்படுத்தினார். அவ்வாறு ஆரம்பித்ததுதான் எனது பயணம்.

ன்னைப்போல பல பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அதற்கான நிறுவனத்தைத் தொடங்கி உதவிகளை செய்து வருகிறார் மகாலட்சுமி சரவணன். தொழில் தொடங்குவது முதல் விற்பனை, வாடிக்கையாளர் அணுகுமுறை என்று அனைத்து தளங்களிலும் பயிற்றுவிக்கும் இவருக்கு, சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது பேட்டி.

உங்களைப் பற்றி?

நான் ஊட்டியில் உள்ள ஒரு மலை கிராமத்தில் பிறந்தேன். 'பெண் குழந்தைக்கு கல்வி அவசியம்' என்று எனது பெற்றோர்கள் என்னை நல்லமுறையில் படிக்க வைத்தனர். நானும் நன்றாகப் படித்து முது

கலைப் பட்டம், ஆராய்ச்சி பட்டம் பெற்றேன். படித்து முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.

திருமணத்திற்குப் பிறகு எனது கணவர்தான் உனக்கு நிறைய திறமைகள் உள்ளது. அதனால், நீ ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டுமென்று என்னை ஊக்கப்படுத்தினார். அவ்வாறு ஆரம்பித்ததுதான் எனது பயணம்.

எனக்கு கணினியில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் பல நுணுக்கங்களைக் கற்றுக் கொண்ட பிறகு 2009-ம் ஆண்டு ஐ.டி. நிறுவனம் தொடங்கினேன். மூன்று வருடம் அந்த நிறுவனத்தை நடத்தினேன். அதன் பிறகு என்னைப் போன்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்று 2013-ம் ஆண்டு அதற்கான நிறுவனம் ஆரம்பித்தேன்.

உங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் என்ன?

நான் மூன்று வருடம் நடத்திய ஐ.டி. நிறுவனத்தில் பல தொழில்சார்ந்த விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒரு தொழிலை செய்வதற்கு எவ்வாறு விளம்பரம் செய்ய வேண்டும், வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச வேண்டும், எப்படி சந்தைப்படுத்துதல் செய்ய வேண்டும் என்பது போன்ற பல விஷயங்கள் அதில் அடங்கும். ஆனாலும், தொழில்முனைவோருக்கு உரித்தான தனித்திறமைகள் அவசியமானதால், இதனை கற்றுக் கொடுக்கும் நிறுவனம் ஏதேனும் இருந்தால் அதில் பயிற்சி எடுக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால், அப்படி எந்த நிறுவனமும் அப்போது இல்லை. எனவே நான் கற்றுக்கொண்ட சில திறமைகளை பல பெண் தொழில் முனைவோருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பித்ததுதான், எனது நிறுவனம். இப்போது இந்த நிறுவனத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த இடர்பாடுகள் என்ன?

ஆரம்பத்தில் எனக்கு நானே தடையாக இருந்தேன். 'என்னால் இதனை செய்ய முடியுமா?' என்று எனக்குள் தயக்கமும், சந்தேகமும் இருந்தது. மகப்பேறு, நிதி, நிறுவனத்திற்கான இடம் போன்ற பல விஷயங்களை நான் சிந்திக்க வேண்டி இருந்தது. பெண்களை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களின் தயக்கத்தைப் போக்குவதற்கும் கொஞ்சம் சிரமமாக இருந்தது.

இந்தியாவில் பெண் தொழில் முனைவோர்கள் குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன?

இந்தியாவில் மொத்த தொழில் முனைவோர்களில் பெண்கள் 15 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களே ஒரு தடையாக இருக்கிறார்கள். ஒரு விஷயத்தை செய்வதற்கு ஆயிரம் தடவை யோசிப்பார்கள். தொழில்முனைவதில் சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவர்களின் பயமும், தயக்கமும் குறையும். யோசனையை சிறிய முயற்சியில் ஆரம்பித்து, பிறகு அதனை வளர்த்துக்கொள்ள திட்டமிட வேண்டும்.

இப்பொழுது மார்க்கெட்டில் எது ட்ரெண்டிங் ஆக இருக்கிறதோ, அதை கற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு தங்கள் தொழிலை நிர்ணயிக்க வேண்டும். தொழில் சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்னைப்போல பலர், பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவி செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அரசாங்கமும் பல திட்டங்கள் மூலம் உதவிகள் செய்கிறது. அதைப் பெண்கள் பயன்

படுத்திக்கொள்ள வேண்டும்.

தாங்கள் தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்துவது, சில காலம் முன்பு வரை பெண்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இப்பொழுது இணையதளம் அவர்களுக்கு சிறப்பான விளம்பரப்படுத்தும் இடமாக அமைகிறது.

குடும்ப நேரத்தையும், வேலை நேரத்தையும் தனித் தனியாகப் பிரித்து விட வேண்டும். அதுபோல எல்லா வேலையையும் தானே செய்யாமல் சிறிய வேலைகளை பகிர்ந்து கொடுத்து தங்கள் நிறுவனத்தை வளர்க்க யுத்திகளை கற்றுக்கொள்ள வேண்டும்.

தொழில் தொடங்குவதில் பெண்கள் சந்திக்கும் தடைகள் என்ன?

பெண்களுக்கு தொழில் தொடங்குவதில் ஆர்வம் இருந்தாலும், குடும்பத்தின் சம்மதம், நிதி பற்றாக்குறை, ஏற்கனவே வேலையில் இருந்து அதை விடுத்து தொழில் தொடங்குவதில் ஏற்படும் தயக்கம் போன்ற பல காரணங்களால் சொந்தத் தொழிலை செய்வதற்கு அஞ்சுகிறார்கள். ஏதேனும் உதவிக்காக நிறுவனங்களை அணுகுவதற்கு முன்பு அவற்றைப் பற்றி நன்கு ஆராய்ந்திருக்க வேண்டும்.

தொழில் தொடங்குவதில் பெரிய படைப்பாற்றல் பங்கு வகிக்கிறது. நிறுவனத்தை உருவாக்குவது எளிதான காரியம் இல்லை என்றாலும், நேர்மறை எண்ணத்துடனும், நேர்மையான உள்ளத்துடனும் தொடங்கி னால் அது கண்டிப்பாக வெற்றி அடையும். ஒருமித்த யோசனையுடைய பெண்களுடன் கூட்டாக சேர்ந்தும் நிறுவனத்தை வளர்க்கலாம். 'நெட்வொர்க் மார்க்கெட்டிங்' எனும் பன்முக நிறுவனங்களுடன் தொடர்பு, உங்கள் நிறுவனத்தை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும். நேர மேலாண்மையும் தொழில் தொடங்குவதில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கும்.

இதுவரை நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி?

தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றுள்ளேன். அதில் குறிப்பிடத்தக்கது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ ப்ராபல்ஷன் காம்ப்ளக்ஸ் சார்பாக 1:200 அளவுகோலில் PSLV நினைவு பரிசு பெற்றது, எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். நேரு மகளிர் சிறப்பு விருது 2022, ஐக்கிய நாடுகளின் ரெக்ஸ் கர்மவீர் குளோபல் பெல்லோஷிப், தொழில் முனைவோர் பிரிவிற்கான வணிக ஆச்சார்யா விருது, சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது, ஸ்பிரிட்டட் வுமன் தொழில் முனைவோர் விருது, யுவசக்தி விருது போன்ற பல விருதுகள் பெற்றுள்ளேன்.

உங்களுக்கு உறுதுணையாக இருந்த நபர்கள் பற்றி?

ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய எனது தந்தை இப்பொழுது எனக்கு மிகுந்த ஆதரவாக இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே 'உனக்குத் திறமை இருக்கிறது. உன்னால் முடியும்' என்று எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார் எனது கணவர். எனது மகளும் சிறு வேலைகளுக்காக என்னை தொந்தரவு செய்யாமல் வீட்டிலே உதவி செய்கிறாள். எனது மாமியார், மாமனார் இருவருமே எனக்கு தன்னம்பிக்கை அளித்து ஊக்கப்படுத்துவார்கள்.

மேலும் செய்திகள்