< Back
மற்றவை
இப்படிக்கு தேவதை
மற்றவை

இப்படிக்கு தேவதை

தினத்தந்தி
|
2 July 2023 7:00 AM IST

எந்தவொரு அதிர்ச்சியான சூழ்நிலையிலும் அதில் உள்ள நேர்மறையான விஷயங்களைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனம் மெல்ல மெல்ல அதில் இருந்து வெளிவரும்.

1. னது தந்தைக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். சமீபத்தில் அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். நானும், எனது ஒரே சகோதரியும் திருமணமானவர்கள். தந்தையின் தனிமை உணர்வை தவிர்ப்பதற்காக, ஒரு செல்லப்பிராணியை அவருக்கு பரிசளிக்க நாங்கள் இருவரும் விரும்பினோம். ஆனால், செல்லப்பிராணியை வீட்டில் வளர்த்தால் அதை பராமரிப்பதற்காக ஒருவர் எப்போதும் அதனுடன் இருக்க வேண்டும். அதனால், தன்னால் வெளியில் எங்கும் செல்ல இயலாது என்ற காரணத்தை கூறி தந்தை மறுப்பு தெரிவிக்கிறார். அவருடைய தனிமையை போக்க நாங்கள் என்ன செய்வது?

ஒவ்வொருவருடைய விருப்பமும் குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு மாறும் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் தந்தையின் தனிமையைக் கையாள நீங்கள் அவரை எந்தவிதத்திலும் கட்டாயப்படுத்தாதீர்கள். தன்னுடைய நண்பர்களையும், பழகியவர்களையும் சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்வதே, அவரது தனிமையைக் கையாள உதவும் என்று அவர் நினைக்கலாம். விரும்பும் போதெல்லாம் அவர்களை தொடர்பு கொள்வதற்கான சுதந்திரம் அவரது தனிமையை போக்கலாம். அவ்வாறு இருக்கும்போது, ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பது என்பது அவருக்கு கூடுதல் பொறுப்பாக தோன்றலாம். எனவே அவரது விருப்பத்துக்கு மதிப்பு கொடுங்கள். ஓய்வு காலத்தில் அவர் சிறப்பாக செயல்படுவார். அவர் மீது பொறுப்பை திணித்ததற்காக நீங்களும் பிற்காலத்தில் குற்ற உணர்ச்சியை உணர மாட்டீர்கள்.

2. நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். விடுமுறை நாட்களில் அடிக்கடி என் சொந்த ஊருக்கு செல்வேன். அவ்வாறு சென்றபோது, ஒரு நாள் வீட்டில் வேலை செய்துகொண்டு இருந்த என் அம்மா திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அன்றிலிருந்து எனக்கு ஏதாவது திடீர் சத்தம் கேட்டால், யாரோ விழுந்து விட்டார்கள் என்ற பயம் வருகிறது. சில நேரங்களில் நடுக்கம் வந்து உடல் முழுவதும் வியர்க்கிறது. இந்த நிலை மாற நான் என்ன செய்வது?

நீங்கள் வீட்டில் இருந்தபோது உங்கள் தாய் திடீரென கீழே விழுந்தது, உங்களுக்கு உளவியல் ரீதியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இவ்வாறு ஏற்படும் எந்தவொரு அதிர்ச்சியும் எதிர்கால தூண்டுதல்களுக்கு வழிவகுக்கும். அதனால்தான், எந்தவிதமான உரத்த சத்தத்தை கேட்கும்போதும் நீங்கள் இவ்வாறு உணர்கிறீர்கள். உங்கள் தாய் கீழே விழுந்தபோது நீங்கள் வீட்டில் இருந்தது உங்கள் அதிர்ஷ்டம் என்று உங்களுக்குள் நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். ஏனெனில், அதனால்தான் அவர் உடனே உங்கள் உதவியை பெற முடிந்தது. அந்த சூழ்நிலையில் அவருக்கு நீங்கள் துணையாக இருக்க முடிந்தது. இவ்வாறு, எந்தவொரு அதிர்ச்சியான சூழ்நிலையிலும் அதில் உள்ள நேர்மறையான விஷயங்களைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனம் மெல்ல மெல்ல அதில் இருந்து வெளிவரும். இந்த சம்பவம் நடந்து 6 மாதங்கள் கடந்த பின்பும், நீங்கள் இதே நிலையில் இருந்தால் மனநல நிபுணரின் உதவியை நாடுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

மேலும் செய்திகள்