< Back
மற்றவை
இப்படிக்கு தேவதை
மற்றவை

இப்படிக்கு தேவதை

தினத்தந்தி
|
11 Jun 2023 7:00 AM IST

உங்கள் உணர்வுகளை உங்கள் கணவருடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். சந்தேகத்தின் சூழலை உருவாக்காமல் நம்பிக்கையின் சூழலை உருவாக்குங்கள். நீங்கள் எதிர்மறை சிந்தனையை உருவாக்கத் தொடங்கினால் வாழ்க்கை விரும்பத்தகாததாக மாறக்கூடும்.

1. னது மகனுக்கு 19 வயது ஆகிறது. கல்லூரி முதல் ஆண்டு படித்து கொண்டிருந்தான். சிறுவயதில் இருந்தே அவன் பருமனாகத்தான் இருப்பான். இதனால் அவனுக்குள் தாழ்வு மனப்பான்மை உருவாகிவிட்டது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் அதில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் கல்லூரியில் சேர்ந்ததும் சக மாணவர்கள் அவனுடைய தோற்றத்தை சுட்டிக்காட்டி தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்ட அவன் கல்லூரிக்கு செல்வது இல்லை. வீட்டிலும் யாரிடமும் பேசுவது இல்லை. என் மகனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

'உருவ கேலி' எனும் சமூக அவலத்தால் பாதிக்கப்பட்டவர்களில் உங்கள் மகனும் ஒருவர். அதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் அவர் தன்னை முற்றிலுமாக தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார். அவரது சுயமரியாதை முழுவதுமாக சிதைந்து, அவர் தன் மீதான நம்பிக்கையை இழந்திருக்கக்கூடும். அவரது உடல் எடை அதிகமாக இருப்பதற்கான காரணத்தை முதலில் கண்டறியுங்கள். ஹார்மோன் பிரச்சினை காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கக் கூடும். எனவே அதற்கான சிறப்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அவரது உணவு முறையில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு ஊட்டச்சத்து நிபுணரின் உதவியை நாடுங்கள். உங்கள் மகன் தனக்கென ஒரு இலக்கை நிர்ணயித்து எடையைக் குறைக்கும் வகையில், சில எளிய உடற்பயிற்சி உபகரணங்களை அவரது அறையில் அமைத்துக் கொடுங்கள். தோற்றத்தை மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தை சீராகப் பராமரிப்பதற்காகவும் அவர் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. அவருடன் இணைந்து இயற்கையான சூழ்நிலையில் நடைப் பயிற்சி செய்யுங்கள். இது அவரது எடையைக் குறைக்க உதவுவது மட்டுமில்லாமல், அவர் உங்களுடன் மனம் விட்டு பேசவும், அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ளவும் உதவும்.

2. எனக்கு திருமணமாகி 6 மாதங்களிலேயே, என்னுடைய கணவர் பணியின் காரணமாக வெளிநாடு சென்றுவிட்டார். நான் இப்போது கைக்குழந்தையுடன் தாய் வீட்டில் வசிக்கிறேன். தினமும் தொலைபேசி வழியாக என்னுடன் பேசி வந்த கணவர், சில மாதங்களாக வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே பேசுகிறார். வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பேச முடியவில்லை என்கிறார். அதைக் கேட்டதில் இருந்து எனக்கு அவர் மீது சந்தேகம் அதிகமாகிறது. இதனால் எங்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கணவர் தனது வேலையின் காரணமாக உங்களுடன் பேச முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கையின் இந்த மிக முக்கியமான காலகட்டத்தில் அவருடைய உணர்ச்சிபூர்வமான ஆதரவையும், அரவணைப்பையும் நீங்கள் இழக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தாய்மைக்கான புதிய பொறுப்புகளுக்கு நீங்கள் பழகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவருடைய இருப்புக்காக நீங்கள் ஏங்குவது இயற்கையானது. அது நடக்காதபோது, உங்கள் மனம் தேவையற்ற விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறது. உங்கள் உணர்வுகளை உங்கள் கணவருடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். சந்தேகத்தின் சூழலை உருவாக்காமல் நம்பிக்கையின் சூழலை உருவாக்குங்கள். நீங்கள் எதிர்மறை சிந்தனையை உருவாக்கத் தொடங்கினால் வாழ்க்கை விரும்பத்தகாததாக மாறக்கூடும். எதிர்மறை ஆற்றலில் மட்டுமே உங்களுக்கு ஈர்ப்பு உருவாகும். எனவே கவனமாக இருங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

மேலும் செய்திகள்