இப்படிக்கு தேவதை
|நீதான் முதலில் பிறந்தவள். மிகவும் முக்கியமானவள், என்று தொடர்ந்து அவளிடம் பேசுவதன் மூலம், அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும். தம்பியை பராமரிக்கும் சிறு சிறு வேலைகளில் அவளை ஈடுபடுத்துங்கள். அதன்மூலம் தனது தம்பியுடன் அவளுக்கு பாச உணர்வு அதிகரிக்கும்.
1. 6 வயதான என் பேத்தி 2-ம் வகுப்பு படிக்கிறாள். அவளது தம்பிக்கு வயது 2. தம்பி பிறந்த பிறகு அவளது நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எல்லாவற்றுக்கும் அடம் பிடிக்கிறாள். பொறாமை குணம் அதிகரித்திருக்கிறது. தனது தம்பியை யாராவது தூக்கிக் கொஞ்சினால் உடனே அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். அவனுக்கு கொடுக்கும் விளையாட்டுப் பொருட்களை பிடுங்கி வைத்துக்கொள்கிறாள். அவனை அடிப்பதும் துன்புறுத்துவதுமாக இருக்கிறாள். சில நேரங்களில் மட்டும் தம்பியைக் கொஞ்சுவாள். பள்ளியிலும் அவள் யாரிடமும் பேசுவதில்லை. இயல்பாக பழகுவதில்லை. ஆனால் படிப்பில் கெட்டிக்காரி. அவளது குணத்தை மாற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வருவது எப்படி?
தனக்கு ஒரு உடன்பிறப்பு பிறந்த பிறகு ஒரு குழந்தை அனுபவிக்கும் இயல்பான போட்டி நிலை தான் இது. தாய் கர்ப்பமாக இருந்த நேரத்தில், தன்னுடைய வாழ்வில் மற்றொரு நபரின் நுழைவுக்கு அந்த குழந்தையை தயார்படுத்தாததும் இதற்கு காரணமாகும். இதுவரை அவளுக்கு மற்றவர்களிடம் இருந்து கிடைத்த கவனத்தையும், பாசத்தையும், இப்போது தம்பியுடன் பங்கு போட்டுக்கொள்வதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "நீதான் முதலில் பிறந்தவள். மிகவும் முக்கியமானவள்" என்று தொடர்ந்து அவளிடம் பேசுவதன் மூலம், அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும். தம்பியை பராமரிக்கும் சிறு சிறு வேலைகளில் அவளை ஈடுபடுத்துங்கள். அதன்மூலம் தனது தம்பியுடன் அவளுக்கு பாச உணர்வு அதிகரிக்கும். அவள் உதவி செய்யும்போது பாராட்டுங்கள். மாறாக அவளை தம்பியுடன் ஒப்பிடுவதோ, திட்டுவதோ கூடாது. இப்போது இருக்கும் நிலை அவளது 10 வயது வரை தொடர்ந்து இருந்தால், அப்போது மனநல ஆலோசகரின் உதவி தேவைப்படலாம். இல்லையெனில் இதை இயல்பாக விட்டுவிடலாம்.
2. எனக்கு திருமணம் நடந்து 3 வருடங்கள் ஆகிறது. குழந்தைக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறேன். எனது கணவருக்கு இரண்டு சகோதரிகள். இருவரும் அவரவர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், அவர்களைப் பிரிந்து கடந்த சில மாதங்களாக எங்களுடன் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக என்னால் கணவருடன் இயல்பாக இருக்க முடியவில்லை. அவருடன் அந்தரங்க உறவிலும் ஈடுபடாமல் இருக்கிறேன். இதனால் அவரது சகோதரிகளை பார்க்கும்போது வெறுப்பு உணர்வு அதிகமாகிறது. இந்த மனஅழுத்தத்தால் தான் எனக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப்போகிறது என்று தோன்றுகிறது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய சூழ்நிலை உங்களை எரிச்சல் அடைய செய்கிறது என்றாலும், இதனை காரணமாகக்கொண்டு நீங்கள் கணவருடன் உறவில் ஈடுபடாமல் இருப்பது சரியானது அல்ல. உங்கள் கணவருடனான பாலியல் நெருக்கத்தில் இருந்து விலகி இருப்பதன் மூலம், நீங்கள் அவரைத் தண்டிப்பது மட்டுமில்லாமல், உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் வீட்டில் நிலவும் சூழ்நிலை உங்களை உதவியற்றவராக எண்ணச் செய்கிறது என்றாலும், உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதை மட்டுமே நீங்கள் கட்டுப்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் கணவருடைய சகோதரிகள், அவர்களுடைய வாழ்வை அவர்களே வடிவமைத்துக்கொள்வார்கள். நீங்கள் உங்கள் கணவருடன் நிம்மதியாக வாழ்வதில் கவனம் செலுத்துங்கள். முக்கியமற்ற காரணங்களுக்காக உங்கள் திருமண வாழ்வை மதிப்பிழக்க செய்யாதீர்கள்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.