இப்படிக்கு தேவதை
|உங்களுக்கு அவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு நீங்கள் புதியவர். எனவே நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். அதுவரை ஒருவருக்கொருவர் இடம் கொடுங்கள். உங்களுக்கு இடையில் பரஸ்பர அன்பு அதிகரிக்கும் போது, உங்கள் விருப்பங்கள் தானாகவே நிறைவேறும்.
1. 5 ஆண்டுகளுக்கு முன்பு என் பெற்றோர், உறவினர் மகனுக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். எனக்கு குழந்தை பிறக்காததால் அவர் என்னை விட்டு பிரிந்து வாழ்கிறார். ஒரு வருடத்துக்கு முன்பு என்னுடைய கல்லூரி தோழர் என்னுடன் மீண்டும் நட்பானார். எனக்கு ஆறுதல் கூறி மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் சென்றார். என் கணவருடன் என்னை மீண்டும் சேர்த்து வைக்க முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, என்னுடைய தோழர் மீது எனக்கு ஈர்ப்பு உண்டாகிறது. இது சரியா? இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது?
உங்கள் நண்பரிடம் நீங்கள் ஈர்க்கப்படுவதாக கூறியுள்ளீர்கள். உங்களைப் பற்றி அவருக்கு எத்தகைய உணர்வு உள்ளது? உங்கள் வாழ்க்கையில் அவர் இவ்வளவு உதவிகள் செய்வதற்கான காரணம் என்ன? அவர் திருமணமாகி குடும்பத்துடன் வசிக்கிறாரா? அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன்தான் அவர் உங்களுக்கு உதவிகள் செய்கிறாரா? உங்கள் குடும்பத்தினர் இதை ஏற்றுக் கொண்டார்களா? இதையெல்லாம் விட முக்கியமாக, நீங்கள் உங்கள் நண்பருடன் பழகுவதை உங்கள் கணவர் இயல்பாக எடுத்துக் கொண்டாரா? நீங்கள் இந்த நட்பை மேலும் தொடர்வதற்கு முன்பு, இவை அனைத்தையும் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். உங்கள் கணவரிடம் இருந்து இழந்த அன்பையும், கவனிப்பையும் நண்பர் மூலமாக பெறுவதற்கு நினைக்கிறீர்கள். முடிவுகளை எடுப்பதற்கு முன்பு பகுத்தறிவுடன் சிந்தியுங்கள். உறவுகளை சிக்கலாக்கிக் கொள்ளாதீர்கள்.
2. எனக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மாமனார், மாமியார், கணவரின் தம்பி, தங்கைகளோடு கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறேன். நான் சிறு வயதில் இருந்தே மாடர்ன் உடைகள் அணிந்து வளர்ந்தேன். திருமணத்துக்கு பின்பும் சேலை அணியாமல் மாடர்ன் உடைகள் அணிந்து வருகிறேன். இதை என் கணவரின் பெற்றோர் எதிர்க்கின்றனர். என் கணவர் இரண்டு பக்கத்தையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். என்னால் எப்போதும் சேலை அணிந்தபடி இருக்க முடியாது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிவது தவறில்லை என்றாலும், நீங்கள் இருக்கும் சூழல் அதற்கு உகந்தது இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் விரும்பும் உடைகளை அணிவதில் உங்கள் கணவர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. எனவே இப்போது நீங்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதே சரியானது. அவரது குடும்பத்தினரை சமாதானப்படுத்துவதற்கு நீங்கள் அவரை கட்டாயப்படுத்த மாட்டீர்கள் என்று அவருக்கு தெரியப்படுத்துங்கள். அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ள உதவும் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சி செய்யுங்கள். இதற்கு சில காலம் ஆகும். உங்களுக்கு அவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு நீங்கள் புதியவர். எனவே நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். அதுவரை ஒருவருக்கொருவர் இடம் கொடுங்கள். உங்களுக்கு இடையில் பரஸ்பர அன்பு அதிகரிக்கும் போது, உங்கள் விருப்பங்கள் தானாகவே நிறைவேறும்.
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.