< Back
மற்றவை
இப்படிக்கு தேவதை
மற்றவை

இப்படிக்கு தேவதை

தினத்தந்தி
|
7 May 2023 7:00 AM IST

தனது பெற்றோர் நெருக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவள் பாதுகாப்பாக உணர வேண்டும். உடலுறவை எதிர்மறையான விஷயமாக அவள் நினைக்க ஆரம்பித்தால், அவளது திருமண வாழ்க்கையை அது பாதிக்கும்.

1. னக்கு 2 மகள்கள். இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள். சமீபத்தில் நான் கணவருடன் அந்தரங்க உறவில் இருந்ததை தவறுதலாக என்னுடைய மூத்த மகள் பார்த்துவிட்டாள். அன்று முதல் எங்கள் இருவரிடமும் அவள் சரியாக பேசுவது இல்லை. சிறு விஷயத்துக்கும் எரிந்து விழுகிறாள். தனது தோழிகளின் பெற்றோர்களைப் பற்றி எங்கள் முன்னே புகழ்ந்து பேசுகிறாள். எங்களை வெறுப்பு உணர்வோடு பார்க்கிறாள். இதனால் நாங்கள் இருவரும் மனவேதனை அடைந்துள்ளோம். இதற்கு தீர்வு என்ன?

உடலுறவு மீதான அவளது அணுகுமுறை நேர்மறையானதாக இல்லை அல்லது தனது பெற்றோர் உடலுறவில் ஈடுபடுவதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை இது காட்டுகிறது. அவளுடைய வயதில் இந்த பக்குவம் இல்லாதது இயல்புதான். உங்கள் மகளுடன் மனம் திறந்து பேசுங்கள். ஆண்-பெண் அந்தரங்க உறவைப் பற்றி அவள் வெளிப்படையாகப் பேசுவதற்கு இடம் கொடுங்கள். உடலுறவு என்பது கணவன்-மனைவிக்கு இடையேயான ஒரு அழகான தொடர்பு மற்றும் அது உணர்ச்சிபூர்வமான நெருக்கத்திற்கு வழிவகுக்கிறது என்பதை அவளுக்குத் தெரியப்படுத்துங்கள்.

தனது பெற்றோர் நெருக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவள் பாதுகாப்பாக உணர வேண்டும். உடலுறவை எதிர்மறை யான விஷயமாக அவள் நினைக்க ஆரம்பித்தால், அவளது திருமண வாழ்க்கையை அது பாதிக்கும். நீங்கள் பேசிய பிறகும் அவளிடம் நேர்மறையான மாற்றங்கள் தெரியவில்லை என்றால், ஒரு மனநல ஆலோசகரின் உதவியை நாடுவது நல்லது. இருப்பினும் தாங்கள் கணவருடன் அந்தரங்க உறவில் ஈடுபடும்போது, தனிப்பட்ட பாதுகாப்பான சூழல் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்வது சிறந்தது.

2. என் மகனுக்கு 10 வயது ஆகிறது. எனது கணவரின் பணி நிமித்தமாக நாங்கள் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறோம். தனியாக இருப்பதால் வீட்டில் எப்போதுமே தொலைக்காட்சி இயங்கிக்கொண்டு இருக்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே எனது மகன் தொலைக்காட்சி பார்த்தபடி வளர்ந்தான். அதில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் மற்றும் ஒளிபரப்பப்படும் திரைப்படங்களில், பெண்கள் அணியும் ஆடைகள் ஆபாசமாக இருப்பதாக தோன்றுகிறது. தொலைக்காட்சி பார்த்து வளரும் என் மகனை இது பாதிக்குமா? எனில், அவனை தொலைக்காட்சி பார்ப்பதில் இருந்து வெளியே கொண்டு வருவது எப்படி?

உங்கள் குழந்தை தனது வயது குழந்தைகளுடன் பழகுவதற்கு அனுமதியுங்கள். தொலைக்காட்சியை மட்டுமே பார்த்துக்கொண்டு இருப்பது உடல் வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல், உளவியல் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கும். இதனால் தங்கள் மகன் தகவல்தொடர்பு திறன், உணர்ச்சி சிக்கல்கள், சிக்கலைத் தீர்க்கும் திறன் போன்றவற்றை கற்றுக்கொள்ள முடியாமல் போகும். இந்த நிலை தொடர்ந்தால், எப்பொழுதும் அவனால் மற்றவர்களின் செயலை மட்டுமே பார்க்க முடியும். தனித்து செயலாற்ற முடியாதவாறு அவனது மூளை பழக்கப்பட்டுவிடும். மணிக்கணக்கில் டி.வி. பார்ப்பது தவறான செயல். உங்கள் மகன் வீட்டில் இருக்கும்போது, ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டுமே டி.வி.யை இயக்க வேண்டும் என்ற கண்டிப்பான விதியை உருவாக்குங்கள். இதனால் அவன் அதிகமாக கோபப்படக்கூடும். அப்போது அவனது கவனத்தை திசைமாற்ற முயற்சி செய்யுங்கள். மற்றவர்களோடு இயல்பாக பழகும் வகையில் அவனை சில பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுங்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அவன் அனுபவிக்கட்டும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

மேலும் செய்திகள்