இப்படிக்கு தேவதை
|வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
1. எனக்கு காதல் திருமணம் நடந்து 15 வருடங்கள் ஆகிறது. கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். எனது அம்மா பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். வயதான அப்பா எங்களுடன் வசிக்கிறார். நாங்கள் வசிப்பது இரண்டு அறைகள் மட்டும் கொண்ட சிறிய வீடு. ஒரு அறையில் அப்பாவும், மற்றொரு அறையில் நாங்களும், குழந்தைகளும் தூங்குவோம்.
இதனால் கடந்த சில வருடங்களாக எனக்கும், கணவருக்கும் இடையில் எவ்விதமான உடல் ரீதியான தொடர்பும் இல்லை. கணவர் என்னை அணுகினாலும் நான் உறவுக்கு சம்மதிப்பது இல்லை.
இந்த நிலையில், தற்செயலாக ஒருநாள் கணவரின் மொபைல் போனை எடுத்துப்பார்த்தபோது, அதில் வேறொரு பெண்ணுக்கு அதிகமாக குறுந்செய்தி அனுப்புவது தெரிந்தது. அவற்றை படித்தபோது சாதாரணமாக தெரியவில்லை. ஏதோ தவறாக நடப்பதுபோல தோன்றுகிறது. இதுகுறித்து கணவரிடம் பேசியபோது மழுப்பலாகவே பதில் சொல்கிறார். இத்தகைய இக்கட்டான நிலையில், நான் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்.
உங்கள் வயதான தந்தையை நீங்கள் பராமரிப்பது, உங்கள் கணவரின் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை. ஆனால், உங்களுக்குள் உடல் ரீதியான நெருக்கம் இல்லாததற்கு, இதை காரணமாகக் கூறுவது ஏற்புடையது இல்லை.
வாய்ப்பு இருந்தால், உங்கள் குழந்தைகளை உங்கள் தந்தையுடன் தூங்கச் செய்யுங்கள். அது முடியாவிட்டால், அவர்கள் வெளியில் இருக்கும் நேரங்களில் தாம்பத்தியத்திற்கு நேரம் ஒதுக்குங்கள். முந்தைய நாட்களில் இருந்த கூட்டுக் குடும்ப அமைப்பு, பகலில் தனிப்பட்ட தருணங்களுக்கு இடமளிக்காததால், கணவன்-மனைவி தாம்பத்யத்துக்கு இரவு நேரம் உகந்ததாக இருந்தது. தற்போதைய காலத்தில் நமது வசதிக்கேற்றவாறு அமைத்துக்கொள்வதில் தவறில்லை.
கணவன்-மனைவி உறவுக்குள் தாம்பத்ய வாழ்க்கை முக்கியமானது. அது மறுக்கப்படுவதும், அதனால் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் நன்மைக்குரியது இல்லை. எனவே உடல் உறவை மறுத்து, அதனால் உங்களுக்குள் இருக்கும் இடைவெளியை அதிகப்படுத்தினால், அது உங்கள் திருமணத்தை தோல்வியை நோக்கி கொண்டு போகலாம். எனவே இதை பரிசீலித்து நல்ல முடிவை எடுக்கவும்.
2. எனக்கு 27 வயது ஆகிறது. பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். எனது அப்பாவின் சகோதரி வீட்டில்தான் தங்கி இருக்கிறேன். அவர்
களுக்கு எந்தவிதத்திலும் பாரமாக இருக்கக்கூடாது என்று, பள்ளி படிப்பு வரை மட்டுமே படித்தேன். தட்டச்சு கற்றுக்கொண்டு ஒரு அலுவலகத்தில் டைபிஸ்ட்டாக வேலைசெய்து வருகிறேன். நான் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி என்னிடம் பாசத்துடன் பழகி வந்தார். ஆனால், சமீபகாலமாக அவர் என்னிடம் பாலியல் தொடர்பான பேச்சுக்களை பேசுகிறார். மறைமுகமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அந்த வேலைதான் என் வாழ்வுக்கு ஆதாரம் என்பதால், என்னால் நேரடியாக எதிர்க்க முடியவில்லை. இப்போது நான் என்ன முடிவு எடுக்க வேண்டும். தயவு செய்து வழிகாட்டவும்.
நீங்கள் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால், உங்கள் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு
அதிகமாக இருக்கும். பாலியல் துன்புறுத்தல் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வது நல்லதல்ல. அவர் திருமணம் ஆகாதவரா? உங்களைத் திருமணம் செய்யும் எண்ணத்தில் இருக்கிறாரா? எனில், உங்களை ஏன் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்? போன்ற கேள்விகளுக்கு அவர் தரும் பதிலை உறுதியாக ஆராயுங்கள். அவை நம்பத்
தகுந்தவை இல்லை எனில், உங்கள் சுய மரியாதையையும், கண்ணியத்தையும் பாதுகாக்க உதவும்
மற்றொரு வேலையை நீங்கள் தேடிக்கொள்வதே நல்லது. உங்கள் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நபர்களுக்கு ஒருபோதும் அடிபணிய வேண்டாம். உங்களுக்கான சிறந்த வேலையைத் தேடினால் நிச்சயம் கிடைக்கும். வாழ்த்துகள்.
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in
டாக்டர் சங்கீதா மகேஷ்,
உளவியல் நிபுணர்.