< Back
மற்றவை
மற்றவை

இப்படிக்கு தேவதை

தினத்தந்தி
|
17 July 2022 1:30 AM GMT

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. நான் சிறுவயதில் இருந்தே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவேன். சில நேரங்களில் அதனால் அவதிப்படுவதும் உண்டு. திருமணம் ஆன பிறகும் இந்த பழக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. எவ்வளவு கட்டுப்பாடோடு சாப்பிட உட்கார்ந்தாலும், சாப்பாட்டை தொட்டவுடன் என்னை அறியாமல் வேகமாக சாப்பிடத் தொடங்கிவிடுகிறேன். இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. உங்கள் ஆலோசனையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

மனஅழுத்தம் காரணமாகவும் இந்தப் பழக்கம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அதில் இருந்து தற்காலிகமாக விடுபடுவதற்கு, அதிகமாக சாப்பிட ஆரம்பித்திருப்பீர்கள். இந்தப் பழக்கம் உங்களுக்கு வசதியாகவும், நன்றாகவும் இருப்பதாக உணர்ந்திருப்பீர்கள். அதனால்தான் அதைத் தொடர்ந்து பின்பற்றுகிறீர்கள். இதை ஒரு பிரச்சினையாக பார்ப்பதற்கு பதிலாக, உங்களை மனஅழுத்தத்துக்கு உள்ளாக்குவது எது என்று முதலில் கண்டறியுங்கள். அதற்கான தீர்வை கண்டுபிடித்து விட்டால், அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் தானாகவே கட்டுக்குள் வந்துவிடும். மேலும், இந்தப் பழக்கத்தால் உங்கள் எடை அதிகரித்திருக்கும். எடையைக் குறைப்பதற்கான செயல்பாடுகளைத் தொடங்குங்கள். அதுவும் உங்கள் உணவு முறையை மாற்றும். ஆரோக்கியமான உணவு பழக்கங்களில் ஈடுபட உதவும்.

2. எனக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். என் கணவர் திருமணத்துக்கு பிறகு, தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையில் இருந்து விலகி வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். எனவே, எனது மாமனார் அவரைக் கண்டித்து வேலைக்காக வெளிநாடு அனுப்பிவைத்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர், மீண்டும் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இங்கு வந்தபிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததால், எங்களை தனிக்குடித்தனம் செல்லும்படி மாமனார் கூறிவிட்டார். தனிக்குடித்தனம் சென்ற பிறகு செலவு பல மடங்கு அதிகரித்தது. எனவே மாமனாரிடம் மன்னிப்பு கேட்டு, மீண்டும் அவரிடமே தஞ்சம் புகுந்தோம். கணவர் குறைந்த சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றிவருகிறார். எனது பிறந்த வீட்டில் இருக்கும்போது, அப்பா விதவிதமான உணவுகளை தினமும் வெளியில் இருந்து வாங்கித்தருவார். நாள்தோறும் அவற்றை ருசித்து பழக்கப்பட்டவள் நான். ஆனால் எனது மாமனார், வெளியில் எதுவும் வாங்கி சாப்பிடக்கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கிறார். மீண்டும் ஏன் இங்கு வந்தோம் என்பது போல தோன்றுகிறது. எனக்கு நீங்கள்தான் நல்வழி காட்ட வேண்டும்.

நீங்களும், உங்கள் கணவரும் பொருளாதார ரீதியாக உங்கள் மாமனாரை நம்பியிருப்பது போல் தெரிகிறது. இந்த போக்கு நீங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவாது. பிறந்த வீட்டில் நீங்கள் இருந்த நிலையை இப்போது ஒப்பிட்டு பார்த்தால், உங்களது மகிழ்ச்சி பறிபோகும். இதனால் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுக்கும் நிலை வரலாம். உங்கள் கணவருக்கு தனது குடும்பத்தை நிதி ரீதியாக கவனித்துக் கொள்ளும் அர்ப்பணிப்பும் பொறுப்பும் வர வேண்டும். வருமானத்தை அதிகரிப்பதன் மூலமாகவோ அல்லது செலவைக் குறைப்பதன் மூலமாகவோ உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த இருவரும் திட்டமிட வேண்டும். உங்கள் மாமனாரின் நிதி உதவியை எதிர்பார்ப்பதை நிறுத்த வேண்டிய நேரம் இது.

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

மேலும் செய்திகள்