< Back
மற்றவை
இப்படிக்கு தேவதை
மற்றவை

இப்படிக்கு தேவதை

தினத்தந்தி
|
10 July 2022 7:00 AM IST

உலகை எதிர்கொள்ளும் வலிமையான பெண்ணாக உங்களை உருவாக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நீங்களே ஆதரவாகவும், பொறுப்பாகவும் இருங்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்ப்பதை தவிர்த்திடுங்கள்.

நான் ஒரு பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். பெற்றோர் என் விருப்பத்திற்கு மாறாக, எனது உறவுக்காரரை திருமணம் செய்து வைத்தனர். எனக்கு அந்த திருமணத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால், நான் அவரை விவாகரத்து செய்து விட்டேன். ஆனால் என் பெற்றோர் என் மீது எந்த பாசமும் இல்லாமல், நான் விவாகரத்து செய்தவருக்கு தீவிரமாக பெண் பார்த்து மறுமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகள் மீது சிறிதளவும் பாசம் இல்லாத பொறுப்பற்ற பெற்றோரை நினைத்து வேதனையாக உள்ளது. இதில் இருந்து வெளியே வர ஆலோசனை தாருங்கள்.

உங்கள் விவாகரத்துக்கு நீங்கள் தான் காரணம் என்று உங்கள் பெற்றோர் நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. உங்கள் விவாகரத்துக்கான காரணத்தை நீங்கள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. எதுவாக இருந்தாலும், இப்போது விவாகரத்து முடிந்துவிட்டது. எனவே உங்கள் வலிமிகுந்த அனுபவத்தில் இருந்து நீங்கள் எவ்வாறு சிறந்த முறையில் வெளிவர முடியும் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்காமல், நீங்கள் தன்னிறைவு அடைந்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்.

பெற்றோராக, அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று சிந்திக்கவும், உணரவும் அவர்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் படித்தவர், உழைக்கிறீர்கள், நீங்கள் துன்பங்களை சந்தித்தாலும், உலகை எதிர்கொள்ளும் வலிமையான பெண்ணாக உங்களை உருவாக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நீங்களே ஆதரவாகவும், பொறுப்பாகவும் இருங்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்ப்பதை தவிர்த்திடுங்கள்.

நான் காதல் திருமணம் செய்தவள். நானும், கணவரும், மாமியார் மற்றும் நாத்தனார்களோடு கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். எனக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. ஆனால், தலை பிரசவத்துக்காக என்னை எனது தாய் வீட்டுக்கு அனுப்பவில்லை. அவர்கள் யாரையும் என்னை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. கணவர் வீட்டினர், எனது குழந்தையை நான் பாலூட்டும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் என்னிடம் இருந்து பிரித்தே வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் அறிந்திருந்தும் எனது கணவர் எதையும் கண்டுகொள்வது இல்லை. நான் சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவள். ஆனால் மாமியார் மற்றும் குடும்பத்தினர் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்த பிரச்சினைகளையெல்லாம் எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். எப்போதும் தைரியமாக இருக்கும் எனக்கு தற்போது எதிர்மறையான எண்ணங்கள், பயம் போன்றவை அடிக்கடி வருகிறது. இவை அனைத்தையும் நான் சமாளித்து மீள்வதற்கு வழிகாட்டுங்கள்.

சமீபத்தில்தான் குழந்தை பிறந்ததாக கூறியிருக்கிறீர்கள். எனவே உங்கள் உடலும், மனமும், கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது ஏற்பட்ட மாற்றங்களில் இருந்து முதலில் குணமடைய வேண்டும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். தவறாக நடக்கும் எல்லாவற்றையும் பற்றி அதிகமாக சிந்திக்காதீர்கள், வருத்தப்படாதீர்கள். இந்த கட்டத்தில் உங்கள் குழந்தை மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். குழந்தையின் சிறிய செயல்களில் மகிழ்ச்சியை உணருங்கள். உங்கள் குழந்தையைத் தொடும்போதெல்லாம் ஆனந்தத்தை உணருங்கள். மற்ற விஷயங்கள் அனைத்தையும் உங்களால் நிச்சயம் சரிசெய்ய முடியும். இது அதற்கான நேரம் அல்ல. எனவே இப்போது நீங்களும், உங்கள் குழந்தையும் பகிர்ந்துகொள்ளும் பொன்னான சிறிய தருணங்களைத் தவறவிடாதீர்கள். தாய்மையை அனுபவியுங்கள்.


வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

மேலும் செய்திகள்