< Back
மற்றவை
மற்றவை

இப்படிக்கு தேவதை

தினத்தந்தி
|
3 July 2022 7:00 AM IST

இப்படிக்கு தேவதை

னக்கு வயது 67. நானும், எனது கணவரும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறோம். சமீபகாலமாக நான் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். எங்களுக்கு 4 பிள்ளைகள். அவர்கள் யாரும் எங்களிடம் அன்பும், ஆதரவும் காட்டுவது இல்லை. என் கணவர் அவரது காலத்துக்கு பின்பு, என்னை அவருக்கு வரும் ஓய்வூதியத்தை வைத்துக்கொண்டு வாழுமாறும், பிள்ளைகளிடம் போக வேண்டாமென்றும் கூறுகிறார். நான் கணவருடைய பேச்சைக் கேட்பதா அல்லது என் மனதுக்கு தோன்றுவதை செய்வதா? என்ற குழப்பத்தில் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு தீர்வு கூறுங்கள்.

உங்களுக்கு இதயப் பிரச்சினை இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். மன அழுத்தத்தாலும், நீங்கள் இப்போது செய்துகொண்டிருக்கும் அதிகப்படியான சிந்தனையாலும் இதயக் கோளாறு மேலும் அதிகமாக நேரிடலாம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். உங்கள் கணவருக்குப் பிறகு நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பது, நீங்கள் பின்னர் சிந்திக்க வேண்டிய ஒன்று. உங்கள் பிள்ளைகள், உங்களை அவர்களுடன் வைத்திருக்க விரும்புவதற்கு, உங்களுக்குள் ஏதாவது மாற்றத்தை நீங்கள் கொண்டுவர வேண்டுமா? என்று சிந்தித்து செயல்படுங்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல், நிகழ்காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் கணவருடன் அனுபவியுங்கள்.

எனக்கும், என் கணவருக்கும் வாக்குவாதம் ஏற்படும்போதெல்லாம் அவர் என்னை அடிக்கிறார். அவரது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு சிறிய வாக்குவாதம் நடைபெற்றாலும், நான் பேசுவதை நிறுத்துவதற்கு என்னை அடிப்பதை மட்டுமே வழக்கமாக கையாள்கிறார். மற்ற நேரங்களில் அவர் மிகவும் அன்பானவர், அக்கறை உள்ளவர். அவரை எந்தவகையில் கையாள வேண்டும் என்று எனக்கு ஆலோசனை வழங்குங்கள்.

உங்கள் கணவர் அன்பான மற்றும் அக்கறையுள்ள நபராக இருந்தால், வாக்குவாதத்தின் போது நீங்கள் பேசும் அல்லது செய்யும் ஏதாவது, உங்களை உடல் ரீதியாக தாக்குவதற்கு அவரை தூண்டுகிறதா? என்று பாருங்கள். கணவன்-மனைவி உறவுக்குள் உடல் ரீதியாக தாக்குவது என்பது, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. எனினும் உங்கள் தரப்பில் இருந்து, அவரை இவ்வாறு செய்வதற்கு தூண்டும் குறைபாடுகள் என்ன? என்பதை முதலில் கண்டறியுங்கள். இருவரும் நல்லவிதமாக இருக்கும் நேரங்களில், ஒருவருக்கொருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதை மனம் விட்டு பேசுங்கள். இதனால் வாக்குவாதங்கள் உடல் ரீதியான சண்டையாக மாறாது.

இதையெல்லாம் செய்தும் பலன் இல்லையென்றால், உங்கள் கணவருக்கு கோபம் தொடர்பான பிரச்சினை இருக்கிறதா என்று உறுதிசெய்யவும். தகுந்த சிகிச்சை மூலம் அதை குணப்படுத்தலாம்.

வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி', தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

மேலும் செய்திகள்