இப்படிக்கு தேவதை
|உங்கள் வாழ்க்கை உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், உங்களைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்ட பலருக்கு முக்கியமானது. வாழ்க்கை மதிப்புக்குரியது, அதை விட்டு விடாதீர்கள். தகுந்த மனநல மருத்துவரை உடனே அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
1. வாழ்க்கையின் மீது அதிக எதிர்பார்ப்பு கொண்டவள் நான். எப்போதும் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்னை நேசிக்கிறார்களா? என்று மனதில் யோசனை ஓடிக்கொண்டு இருக்கிறது. எந்த நேரமும் மனதில் குழப்பம் குடிகொண்டு இருக்கிறது. இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது. சில நேரங்களில் தற்கொலை எண்ணம் கூட தோன்றுகிறது. தனிமையாக இருந்தால் போதும் என்ற மனநிலை உண்டாகிறது. இதைத் தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கையில் குழப்பமடைவது ஆபத்தானது அல்ல. ஆனால், யாரையும் நம்பாமல் இருப்பது, எப்போதும் தனிமையில் இருக்க விரும்புவது, எல்லாவற்றையும் வெறுப்பது மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆபத்தானவை.
உங்கள் வாழ்க்கை உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், உங்களைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்ட பலருக்கு முக்கியமானது. வாழ்க்கை மதிப்புக்குரியது, அதை விட்டு விடாதீர்கள். தகுந்த மனநல மருத்துவரை உடனே அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
2. எனக்கு பெற்றோர் கிடையாது. மனநலம் பாதிக்கப்பட்ட தம்பி இருக்கிறான். வயதான பாட்டியின் ஆதரவில் வளர்ந்தோம். கல்லூரி படிக்கும்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். கல்லூரியில் உடன் படித்த நண்பரை காதலித்து திருமணம் செய்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம். குழந்தை இல்லை.
தம்பியை எங்களுடன் வைத்து கவனித்து வருகிறோம். எங்களால் முடிந்த மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் செய்து விட்டோம். ஆனாலும் அவனது நிலையில் மாற்றம் இல்லை. சமீபகாலமாக அவனது நடவடிக்கைகள் அனைவருக்கும் இடையூறாக இருக்கிறது. கணவர் அவனை காப்பகத்தில் சேர்க்கலாம் என்று கூறுகிறார். ஆனால் எனக்கு அவனை வீட்டை விட்டு எங்கும் அனுப்ப மனம் ஒத்துழைக்கவில்லை. இதனால் கணவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடுகள் வருகிறது. என்னால் இருவரையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை. தயவு செய்து எனக்கு நல்வழி கூறுங்கள்.
நீங்கள் பல இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள். வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த துன்பங்கள் அனைத்தையும் பொறுமையோடு கடந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் சகோதரரைப் பற்றி முடிவு எடுக்கும் முன்பு, அவருக்கு எது உதவும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். உங்களால் அவரின் அடிப்படைத் தேவைகளை மட்டுமே நிறைவேற்ற முடியும். ஆனால், அவரை தகுந்த சிகிச்சை மையத்தில் சேர்த்து பார்த்துக்கொள்ளும்போது, அங்கு அவருக்குத் தேவையான சிகிச்சைகள், பயிற்சிகள் மற்றும் வழிமுறைகள் வழங்குவார்கள். இதனால் உங்கள் காலத்திற்கு பிறகும், அவர் அவருக்கான வாழ்க்கையை சரியான முறையில் வாழ முடியும்.
உங்களுக்கும், உங்கள் சகோதரருக்கும் துணையாக இருக்கும் உங்கள் கணவருக்கு நன்றி உள்ளவராக இருங்கள். உங்கள் சகோதரரை தகுந்த மையத்தில் சேர்த்து விடுவதால், நீங்கள் அவரை கைவிடுவதாக அர்த்தம் ஆகாது. நீங்கள் உங்கள் கணவரோடு வாழ வேண்டிய வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். உங்களுக்கு ஏன் குழந்தை இல்லை என்று நீங்கள் குறிப்பிடவில்லை. அது எதுவாக இருந்தாலும், கணவரோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
வாசகிகள் உங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',
தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.
மின்னஞ்சல்: devathai@dt.co.in